வழிபாடு
வேதநாராயண பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

வேதநாராயண பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

Published On 2021-12-15 04:34 GMT   |   Update On 2021-12-15 04:34 GMT
வேதநாராயண பெருமாள் உப நாச்சியார்களுடன் பரமபத வாசல் கடந்து வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
தொட்டியம் அருகே திருநாராயணபுரத்தில் பிரசித்தி பெற்ற வேதநாராயண பெருமாள் சமேத வேதநாயகி தாயார் கோவில் உள்ளது. இங்கு பெருமாள் ரிக், யஜூர், சாம, அதர்வன ஆகிய நான்கு வேதங்களை தலையணையாக கொண்டு பிரம்மாவிற்கு வேத உபதேசம் செய்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சியளிக்கிறார். இதனால், தன்னை வணங்க வரும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி செல்வத்தை அளிப்பார் என்பது நம்பிக்கை.

இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 4-ந் தேதி பகல் பத்து நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நேற்று அதிகாலை 5 மணிக்கு நடைபெற்றது. வேதநாராயண பெருமாள் உப நாச்சியார்களுடன் பரமபத வாசல் கடந்து வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை காரணமாக குறைந்த அளவு பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர். சொர்க்கவாசல் திறந்த பின் எம்பெருமான் ஆஸ்தான மண்டபத்தை வந்தடைந்ததும். காலை 8 மணிக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. விழாவில் முசிறி தொகுதி எம்.எல்.ஏ. காடுவெட்டி ந.தியாகராஜன், தொட்டியம் தாசில்தார் சாந்தகுமார், அரசலூர் ஊராட்சி மன்ற தலைவர் சஞ்சீவி மற்றும் தொட்டியம், பாலசமுத்திரம், கார்த்திகைபட்டி, மணமேடு, கோடியாம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.
Tags:    

Similar News