செய்திகள்
கோவை-ராஜ்–கோட் சரக்கு ரெயில் சேவை

கோவை-ராஜ்கோட் இடையே சரக்கு ரெயில் சேவை : கோட்ட மேலாளர் தொடங்கி வைத்தார்

Published On 2021-01-10 17:37 GMT   |   Update On 2021-01-10 17:37 GMT
கோவை-ராஜ்கோட் இடையே சரக்கு ரெயில் சேவையை கோட்ட மேலாளர் தொடங்கி வைத்தார்.
கோவை:

வடகோவை ரெயில் நிலையத்தில் இருந்து குஜராத் மாநிலம் ராஜ்கோட்டிற்கு சரக்கு ரெயில் சேவை தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சரக்கு ரெயில் சேவையை சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் ஏ.ஜி.சீனிவாஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கோட்ட வணிக முதுநிலை மேலாளர் ஹரிகிருஷ்ணன் உள்பட ரெயில்வே அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் 2-வது சரக்கு ரெயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இந்த சரக்கு ரெயில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு வடகோவை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை காலை 5 மணிக்கு குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சென்றடையும்.

இந்த சரக்கு ரெயில் வஞ்சிபாளையம் (திருப்பூர்), ஆங்கூர் (ஈரோடு), உத்னா (சூரத்), பருச் சந்திப்பு (அங்கலேஸ்வர்), கங்காரியா (ஆமதாபாத்) ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

இதேபோல் மறுமார்க்கமாக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் ராஜ்கோட் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் இந்த சரக்கு ரெயில் வியாழக்கிழமை இரவு 8.35 மணிக்கு வடகோவை ரெயில் நிலையத்தை வந்தடையும்.

கொரோனா அச்சம் காரணமாக பணியாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சரக்குகளை ரெயிலில் ஏற்றி, இறக்குவார்கள். இந்த சரக்கு ரெயிலில் மருத்துவ உபகரணங்கள், முகக்கவசங்கள், துணிகள் உள்ளிட்டவை கொண்டுசெல்லப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News