ஆன்மிகம்
பஞ்சவடி கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம் நடந்த போது எடுத்த படம்.

பஞ்சவடி கோவிலில் 36 அடி உயர ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம்

Published On 2021-01-13 03:12 GMT   |   Update On 2021-01-13 03:12 GMT
பஞ்சவடி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்- புதுச்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஞ்சவடி கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

அதன்படி ஜெயமாருதி சேவா டிரஸ்ட் ஏற்பாட்டின்பேரில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது.

இதையொட்டி கடந்த 8-ந் தேதி சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் தொடங்கி நடைபெற்றது. நேற்று அதிகாலை 4 மணிக்கு ராமச்சந்திர மூர்த்தி சன்னதியில் காராம்பசுவுக்கு விசேஷ பூஜை மற்றும் கோபூஜை நடைபெற்றது. தொடர்ந்து தனூர் பூஜைகளும், காலை 6 மணிக்கு யாகசாலை பூஜையும் நடந்தது.

காலை 8.30 மணிக்கு ஆஞ்சநேய சாமிக்கு 2,500 லிட்டர் பாலுடன் சந்தனம், கான்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட சுத்தமான பன்னீர் போன்ற திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. திருமஞ்சனம், விஷேச அலங்கார ஆராதனைக்கு பின்னர் பகல் 12 மணி அளவில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் ஆஞ்சநேயரை வழிபட்டனர். மாலையில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பூஜைகளை பாப்பாகுடி வெங்கடேச பட்டாச்சாரியார், பஞ்சவடி கோவில் பட்டர் ரங்கராஜ பட்டாச்சாரியார், வேத விற்பன்னர்கள் நடத்தினர். விழாவுக்கான ஏற்பாடுகளை பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எம்.கோதண்டராமன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News