செய்திகள்
வாக்கு எண்ணிக்கை மையம் அருகே வைக்கப்பட்டுள்ள கண்டெய்னர்.

தென்காசி வாக்கு எண்ணிக்கை மையம் அருகே வைக்கப்பட்ட கண்டெய்னரால் பரபரப்பு

Published On 2021-04-18 07:23 GMT   |   Update On 2021-04-18 07:23 GMT
தென்காசி ஆகிய 5 தொகுதிகளின் வாக்கு பெட்டிகள் தென்காசி அருகே கொடிக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.

செங்கோட்டை:

தென்காசி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளான சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், ஆலங்குளம், தென்காசி ஆகிய 5 தொகுதிகளின் வாக்கு பெட்டிகள் தென்காசி அருகே கொடிக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.

இதனையொட்டி அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சுற்றிலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் ரோந்து சென்று வருகின்றனர். இந்நிலையில் அந்த கல்லூரி வளாகத்திற்கு அருகே சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள தனியார் இடத்தில் பூட்டுப் போடப்பட்ட நிலையில் இன்று காலை கண்டெய்னர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் அங்கு திரண்டனர். அங்கு பாதுகாப்பிற்கு நின்ற போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தகவல் அறிந்து தேர்தல் அலுவலர்களும் சம்பவ இடத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே அதிகாரிகள் சென்று அந்த கண்டெய்னரை திறந்து பார்த்தபோது அதில் விளக்குள் பொருத்தப்பட்டு வண்ணமயமாக காட்சி அளித்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் செந்தில் நாதன் என்பவருக்கு சொந்தமான இடம் என்பதும், அதில் அவர் புதிதாக வீடு கட்டி விற்க ஆயத்த பணிகளை செய்வதற்காக ஆட்கள் தங்கவும், பொருட்களை வைக்கவும் கண்டெய்னர் கொண்டு வந்துள்ளது தெரிய வந்தது.

ஆனாலும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அந்த கண்டெய்னரை அங்கிருந்து அப்புறப்படுத்த இடத்தின் உரிமையாளர்களிடம் தெரிவித்தனர். உடனே கண்டெய்னரும் அகற்றப்பட்டது.

Tags:    

Similar News