செய்திகள்
ஊரடங்கு உத்தரவு

ஊரடங்கு தளர்வு அறிவித்தும் மாவட்ட எல்லைகளில் வசிக்கும் விவசாயிகள் தவிப்பு

Published On 2020-05-23 10:26 GMT   |   Update On 2020-05-23 10:26 GMT
ஊரடங்கு தளர்வுகள் அறிவித்த பின்னரும் மாவட்ட எல்லைகளில் வசிக்கும் விவசாயிகள் பணிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.

வடமதுரை:

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 4-வது கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. மாவட்டங்களுக்குள் வாகனங்களில் செல்ல இ-பாஸ் தேவையில்லை. வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கு மட்டும் பாஸ் எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் விவசாயிகள், வேலைக்கு செல்பவர்கள், பணிக்கு செல்ல ஏதுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மாவட்ட எல்லைகளில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பணிக்கு செல்பவர்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

திண்டுக்கல் - திருச்சி மாவட்ட எல்லையில் வசிக்கும் வியாபாரிகள் அய்யலூர் பகுதிகளில் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். மேலும் தனியார் நிறுவனங்களுக்கும் வேலைக்கு சென்று வருகின்றனர். இவ்வாறு மோட்டார் சைக்கிளில் செல்லும் நபர்களை தடுத்து நிறுத்தி போலீசார் இ-பாஸ் கேட்கின்றனர். இ-பாஸ் இல்லையென்றால் வழக்குகள் பதியப்படுகிறது.

சுமார் 10 முதல் 15 கி.மீ தொலைவில் உள்ள கிராமங்களுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் மற்றும் ஊழியர்கள் தவித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News