வழிபாடு
கொடிமரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்ட காட்சி.

நெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2021-12-11 08:49 GMT   |   Update On 2021-12-11 08:49 GMT
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கோவில்களில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் திருவாதிரை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற டவுன் நெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை திருவிழாவையொட்டி இன்று காலை 7 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வருகிற 20-ந்தேதி வரை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் திருவெம்பாவை வழிபாடு மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் இன்று காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவாதிரை திருவிழா தொடங்கியது. 7-ம் நாளான வருகிற 17-ந்தேதி காலை 10.30 மணிக்கு அழகிய கூத்தர் சபையில் இருந்து விழா மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். 20-ந்தேதி அதிகாலை மகா அபிஷேகம், கோபூஜை, ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.

இதேபோல் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி கோவிலில் திருவெம்பாவை திருவிழா இன்று காலை 5.46 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றன. குற்றாலம் குற்றாலிங்க சுவாமி கோவிலிலும் இன்று திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Tags:    

Similar News