செய்திகள்
கோப்புபடம்.

கண்டெய்னர் தட்டுப்பாட்டால் திருப்பூரில் பின்னலாடைகள் தேக்கமடையும் அபாயம்

Published On 2021-09-14 07:07 GMT   |   Update On 2021-09-14 07:07 GMT
உரிய நேரத்திற்குள் ஆர்டர்களை அனுப்பாவிட்டால் ஆர்டர்களை அளித்த வர்த்தகர்கள் தொடங்கி உற்பத்தியாளர்கள் வரை அனைவரையும் பாதிக்கும்.
திருப்பூர்:

பின்னலாடை உற்பத்தியில் இந்தியாவின் மிகப்பெரிய மையமாகவும் சர்வதேச முக்கியத்துவம் பெற்ற நகரமாகவும் விளங்குகிறது திருப்பூர். ஆண்டுக்கு ரூ.50ஆயிரம் கோடி வரை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மேற்கொண்டு வந்த நிலையில் கொரோனா தொற்று பரவலால் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. 

இதில் இருந்து மீளும் முயற்சிகளில் தொழில் துறையினர் உள்ள நிலையில் உற்பத்தி செய்யப்பட்ட பின்னலாடைகளை ஏற்றுமதி செய்வதில் கடந்த இருமாதங்களுக்கு மேலாக சிக்கல் நிலவுகிறது. 

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர்  (டீமா) எம்.பி.முத்துரத்தினம் கூறியதாவது:-

வெளிநாட்டு ஆர்டர்களை முடித்து துறைமுகங்களுக்கு கொண்டு சென்று  கண்டெய்னர்களில் கப்பல்கள் மூலமாக அனுப்பி வைப்பதே வழக்கம். இதையே விமானம் மூலமாக அனுப்பினால் கப்பல்களில் ஆகும் செலவை விட 4 மடங்கு செலவாகும். 

தற்போது சர்வதேச அளவில் நாடுகளுக்கு மத்தியில் எழுந்துள்ள தொழில் போட்டியால் இந்தியாவில் இருந்து மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி கட்டமைப்பை சிதைக்க பல்வேறு நாடுகள் முனைப்பு காட்டுகின்றன. அதன் ஒரு தாக்கமாக  இந்தியாவில் இருந்து பொருட்களை ஏற்றுமதி செய்ய கண்டெய்னர் தட்டுப்பாடு நிலவுகிறது.  

முன்னர் அளித்த வாடகையில் தற்போது 3 மடங்கு வாடகை அளித்தால் மட்டுமே கண்டெய்னர் கிடைக்கிறது. மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்டவற்றுக்கு  மத்தியில் கிடைக்கும் குறைந்த அளவிலான லாபத்தில் இதற்கும் கூடுதலாக செலவு செய்வது ஏற்றுமதியாளர்களுக்கு சுமையாக அமைந்துள்ளது.  

இத்தகைய பிரச்சினைகளால் கோடிக்கணக்கிலான பின்னலாடைகள் தேக்கமடையும் நிலை உருவாகி வருகிறது-  உரிய நேரத்திற்குள் ஆர்டர்களை அனுப்பாவிட்டால் ஆர்டர்களை அளித்த வர்த்தகர்கள் தொடங்கி  உற்பத்தியாளர்கள் வரை அனைவரையும் பாதிக்கும்.

வெளிநாட்டு வர்த்தகர்கள், ஆர்டர்களை ரத்து செய்தால் நிலைமை இன்னும் மோசமாகி விடும். இவ்விவகாரத்தில் உடனடியாக மத்திய அரசு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜவுளித்துறைக்கு நீண்ட கால  தொலைநோக்கு அடிப்படையில் திட்டங்களை அறிவிப்பது அவசியம் என்றாலும், ஏற்றுமதி சீராக நடைபெற இது போன்ற பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும். சரக்குகளை கையாளும் நிறுவனங்கள், நாடுகளிடம் பேசி மாற்று வழிகளை மத்திய அரசு உருவாக்கி தர வேண்டும் என்றார். 
Tags:    

Similar News