லைஃப்ஸ்டைல்
குழந்தைகளின் உணவுமுறையும்... லைஃப் ஸ்டைல் நோய்களும்...

குழந்தைகளின் உணவுமுறையும்... லைஃப் ஸ்டைல் நோய்களும்...

Published On 2020-11-10 03:09 GMT   |   Update On 2020-11-10 03:09 GMT
நாம் குழந்தையாக இருந்தபோது நமக்கோ வராத வித்தியாசமான நோய்கள் எல்லாம் நம் குழந்தைகளுக்கு ஏன் வருகின்றன என்று பார்த்தால் அதற்குப் பின்புறம் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை இருக்கும். குழந்தைகளைப் பாதிக்கும் லைஃப் ஸ்டைல் நோய்கள் என்னென்ன வாங்க பார்க்கலாம்.
குழந்தையும் கேட்பாரின்றி ஆரோக்கியமற்ற கண்ட உணவுகளையும் உண்டு, ஆரோக்கியமற்ற விளையாட்டுகளில் தன்னையும் தன் நேரத்தையும் மூழ்கடிக்கின்றனர். விளைவு, விதவிதமான லைஃப் ஸ்டைல் நோய்கள். நம் முன்னோர்களுக்கோ நாம் குழந்தையாக இருந்தபோது நமக்கோ வராத வித்தியாசமான நோய்கள் எல்லாம் நம் குழந்தைகளுக்கு ஏன் வருகின்றன என்று பார்த்தால் அதற்குப் பின்புறம் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை இருக்கும். குழந்தைகளைப் பாதிக்கும் லைஃப் ஸ்டைல் நோய்கள் என்னென்ன வாங்க பார்க்கலாம்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கம்தான் ஆரோக்கியமான உடலுக்கு அடிப்படை. ஆனால், இன்றைய குழந்தைகள் பீஸா, பர்கர், சாக்லேட், கோலா பானங்கள், பானி பூரி, பேல் பூரி, மசாலா பூரி போன்ற சாட் ஐட்டங்கள், மசாலா உணவுகள், ஜங்க் ஃபுட்ஸ், செயற்கையான ரசாயனப்பொருட்கள் சேர்க்கப்பட்ட பலரச பானங்கள், ஹெல்த் டிரிங்க்ஸ், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் உட்கொள்கிறார்கள்.

இதுதான் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், சர்க்கரை எனக் கொண்டுவருகிறது. தரமற்ற இந்த உணவுகளால் ஏற்படும் அதிகப்படியான தொப்பை, உடல்பருமன் இதய நோய்களைக்கூட உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நாம் உண்ணும் உணவில் கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள், நார்ச்சத்து, நுண்ணூட்டச்சத்துக்கள், தாதுஉப்புக்கள் போன்ற அனைத்துச் சத்துக்களும் சமச்சீரான அளவில் இருக்க வேண்டியது அவசியம்.

இன்றைய குழந்தைகள் காலையில் பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் காலை உணவை உண்பது இல்லை. இரவில் வெகு நேரம் நாம் உண்ணாததால் பசியுணர்வு ஏற்பட்டு, உணவைச் செரிப்பதற்காக அமிலங்கள் சுரந்து தயார்நிலையில் இருக்கும். நாம் காலை உணவைத் தவிர்க்கும்போது நம் இரைப்பையையும் குடலையும் அந்த அமிலச் சுரப்பு பாதிக்கிறது. மேலும், இதனால், உடலின் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுவதால் உடல் பருமன், பி.பி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

எனவே எந்தக் காரணத்தை முன்னிட்டும் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. உணவு இடைவேளையில் ஆரோக்கியமற்ற உணவுகளைத் தவிர்த்துவிட்டு பழங்கள், நட்ஸ், சுண்டல் போன்ற புரதங்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மதியம் அனைத்துச் சத்துக்களும் கொண்ட சமச்சீரான உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். வெறும் கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசியை மட்டுமே உண்ணாமல் கம்பு, கேழ்வரகு, வரகு, பனிவரகு, சாமை, சோளம் போன்ற சிறுதானியங்களையும் அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

இரவில் செரிமானத்துக்கு எளிதான உணவை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். இரவில் கடினமான உணவை உண்ணும்போது செரிமானம் தாமதமாவதால் உறக்கமும், உடலின் பிற வளர்சிதை மாற்றப் பணிகளும் பாதிப்பட்டு உடல் பருமன் ஏற்படக்கூடும். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் உப்பை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். அதே போல் சர்க்கரையையும் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். வாய்ப்பு இருந்தால் வெள்ளை உப்புக்கு பதிலாக இந்துப்பு எனப்படும் கறுப்பு உப்பையும், வெள்ளைச் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி, கரும்புச்சர்க்கரை, பிரவுன் சுகர் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
Tags:    

Similar News