செய்திகள்
நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்வதை காணலாம்

மணிமுத்தாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்வு

Published On 2021-11-27 08:12 GMT   |   Update On 2021-11-27 08:12 GMT
மணிமுத்தாறு அணைக்கு இதுவரை இல்லாத அளவு விநாடிக்கு 7,194 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
நெல்லை:

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு பருவமழை வழக்கத்தைவிட அதிக அளவில் பெய்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கன மழை பெய்ததால் அனைத்து அணைகளும் நிரம்பி உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நெல்லை டவுன், பாளை, களக்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்தநிலையில் நேற்று மழை குறைந்ததால் வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் மட்டும் தண்ணீர் தேங்கி உள்ளது. நெல்லை- தென்காசி சாலையான டவுன் மாநகராட்சி கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகனங்கள் வெள்ளநீரில் நீந்தியபடி செல்கிறது. அதைவெளியேற்றும் பணி நடந்து வருகிறது. இந்தநிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

பாபநாசம் அணைக்கு இன்று காலை விநாடிக்கு 6,669 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து ஆற்றில் 6,818 கனஅடி தண்ணீரும், கால்வாய்களில் 6,100 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.

பாபநாசம் அணை நீர்மட்டம் 138.75 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 142.62 அடியாக உள்ளது. அணை பாதுகாப்பு கருதி கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

மணிமுத்தாறு அணைக்கு இதுவரை இல்லாத அளவு விநாடிக்கு 7,194 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணை நிரம்பாததால், அணையில் இருந்து தண்ணீர் எதுவும் திறக்கப்படவில்லை. இதனால் மணிமுத்தாறு அணை நீர்மட்டம் ஒரேநாளில் 7 அடி உயர்ந்தது. நேற்று 95.30 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 102.20 அடியாக உயர்ந்தது.

வடக்கு பச்சையாறு அணையும், இதுவரை நிரம்பாமல் இருந்தது. தற்போது பெய்த மழையால் வடக்கு பச்சையாறு அணைக்கும் கூடுதல் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 30.50 அடியாக இருந்த நீர்மட்டம், ஒரேநாளில் 4 அடி உயர்ந்து இன்று 34.75 அடியாக உள்ளது.

கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய அனைத்து அணைகளும் நிரம்பியதால் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

இதனால் தாமிரபரணி ஆற்றில் கூடுதல் தண்ணீர் செல்கிறது. நெல்லை பகுதியில் தாமிரபரணி ஆற்றின் மொத்த கொள்ளளவு நீரோட்டம் விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடியாகும். தற்போது நெல்லை பகுதியில் விநாடிக்கு 24,610 கனஅடி தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது. மருதூர் கால்வாய் அருகே கிளைநதிகளில் இருந்தும் கூடுதல் தண்ணீர் வந்து சேருவதால், ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை கடந்து விநாடிக்கு 31,261 கனஅடி தண்ணீர் செல்கிறது. இந்த தண்ணீர் முக்காணி தடுப்பணையை கடந்து நேராக கடலுக்கு செல்கிறது. இதனால் இன்றும் தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

நெல்லை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 776 குளங்களும், உள்ளாட்சி கட்டுப்பாட்டில் 329 குளங்களும் என மொத்தம் நீர்வரத்து குளங்கள் 1,105 உள்ளன. இதில் 768 குளங்கள் நிரம்பியது. 72 குளங்களில் 50 சதவீதம் தண்ணீர் உள்ளது. 265 குளங்களில் 50 சதவீதத்துக்கும் குறைவாக தண்ணீர் உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் 425-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி உள்ளன. 500-க்கும் மேற்பட்ட குளங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக தண்ணீர் உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் அதிக அளவில் தண்ணீர் வந்த 12 குளங்கள் உடைந்து சேதம் ஏற்பட்டது. இவைகள் உடனடியாக சரிசெய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News