செய்திகள்
சிவசேனா, பாஜக

இந்திரனின் அரியணையை கொடுத்தாலும் பா.ஜ.க.வுடன் இணையமாட்டோம் -சிவசேனா

Published On 2019-11-22 07:21 GMT   |   Update On 2019-11-22 07:21 GMT
இந்திரனின் அரியணையை தந்தாலும் பா.ஜ.க.வுடன் இனி சிவசேனா இணையப் போவதில்லை என சிவசேனா கட்சி எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மும்பை: 

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க., சிவசேனா கட்சிகள் இடையே முதல்-மந்திரி பதவி விஷயத்தில் ஏற்பட்ட  மோதலை தொடர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் கனவு தகர்ந்தது. எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாததால் கடந்த 12-ம் தேதி அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.  

இதையடுத்து பாஜகவை அடுத்து பெரும்பான்மை பெற்ற சிவசேனா கட்சி, எதிர் அணியான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ்  கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைக்க தீவிரம் காட்டி வந்தது. இது தொடர்பாக 3 கட்சியின் முக்கிய தலைவர்களும் அவ்வப்போது  சந்தித்து ஆலோசனையும் நடத்தி வந்தனர். 

இதற்கிடையே, சிவசேனா கட்சி, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க உள்ளதாகவும், 5  ஆண்டுகளுக்கும் சிவசேனா கட்சியை சேர்ந்தவரே முதல்வராக இருப்பார். சுழற்சி முறையில் முதல்வர் பதவி இருக்காது எனவும்  சஞ்சய் ராவத் இன்று செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.  

முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்ள பாஜக ஒப்புக்கொண்டது பற்றிய வெளியான செய்தி குறித்து கேட்டதற்கு பதில் அளித்த ராவத்,  ‘மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் ஆட்சியமைய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.  கூட்டணி ஆட்சியமைப்பதற்கு பாஜகவிற்கு கொடுத்த நேரம் முடிந்து விட்டது. இனி இந்திரனின் அரியணையை தந்தாலும் பாஜகவுடன்  சிவசேனா இணையாது’ என்றார்.
Tags:    

Similar News