செய்திகள்
அனந்த்குமார் ஹெக்டே

40 ஆயிரம் கோடி ரூபாயை காப்பாற்றிய 80 மணி நேர முதல்-மந்திரி?: பாஜகவின் நாடக விளக்கம்

Published On 2019-12-02 08:30 GMT   |   Update On 2019-12-02 08:30 GMT
மகாராஷ்டிரா சட்டசபையில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பலம் இல்லாமல் தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றது ஏன்? என்பது தொடர்பாக பாஜக புதிய விளக்கம் அளித்துள்ளது.
 மும்பை:

கர்நாடக மாநிலத்தில் இடைத்தேர்தலை சந்திக்கவுள்ள சட்டசபை தொகுதிகளில் ஒன்றான எல்லாப்பூர் பகுதியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் மத்திய முன்னாள் மந்திரி அனந்த்குமார் ஹெக்டே எம்.பி. பங்கேற்றுப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சமீபத்தில் நம் கட்சியை சேர்ந்தவர் மகாராஷ்டிராவில் 80 மணி நேரம் மட்டுமே முதல் மந்திரியாக இருந்துவிட்டு ராஜினாமா செய்தார். நாம் இந்த நாடகத்தை ஏன் நடத்த வேண்டும்? எங்களுக்கு சட்டசபையில் போதுமான பெரும்பான்மை இல்லை என்று தெரிந்தும் அவர் ஏன் முதல் மந்திரியானார்?
இந்த கேள்வியை பொதுவாக எல்லோரும் கேட்கிறார்கள்.



முதல் மந்திரியின் கட்டுப்பாட்டில் 40 ஆயிரம் கோடி ரூபாய் இருந்தது. தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சியை சேர்ந்த யார் ஆட்சி அமைத்திருந்தாலும் அந்த 40 ஆயிரம் கோடி ரூபாய் வளர்ச்சிப் பணிகளுக்குப்போய் சேர்ந்திருக்காது. வேறு காரியங்களுக்கு தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கும்.

அதை தடுப்பதற்காக எல்லாம் முன்கூட்டியே முழுமையாக திட்டமிடப்பட்டது. (3 கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைப்பது பற்றி) எங்களுக்கு தெரியவந்ததும் ஒரு நாடகம் நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

எனவே, சில சமாளிப்புகளை (அட்ஜெஸ்ட்மன்ட்) செய்து தேவேந்திர பட்னாவிஸ் முதல் மந்திரியாக பதவி ஏற்கச் செய்தோம். பதவி ஏற்ற 15 மணி நேரத்தில் அந்த 40 ஆயிரம் கோடி ரூபாய் பாதுகாப்பாக எங்கே போய்ச்சேர வேண்டுமோ..,? அதை உறுதிப்படுத்தி வைத்தார்.

மொத்த தொகையும் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. அந்தப் பணம் அடுத்த முதல் மந்திரி கையில் கிடைத்திருந்தால்..? என்ன ஆகி இருக்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அனந்த்குமார் ஹெக்டேவின் இந்த கருத்துக்கு முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று மறுப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News