செய்திகள்
மானுப்பட்டி

மானுப்பட்டி கிராமத்தில் தூய்மைப்பணிகள் தீவிரம்

Published On 2021-06-11 09:36 GMT   |   Update On 2021-06-11 14:17 GMT
பேராசிரியர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப் பட்டதையடுத்து மானுப்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மானுப்பட்டி கிராமத்தில் 50க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 4பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் அதே கிராமத்தை சேர்ந்த 36 வயதான தனியார் கல்லூரி பேராசிரியர் ஒருவர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய அவரின் நிலையை கருதி மானுப்பட்டி கிராமமக்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இதுகுறித்து கிராமமக்கள் கூறும் போது, பாதிக்கப்பட்ட பேராசிரியருக்கு தந்தை இல்லை. வயதான தாய் மற்றும் மனைவி உள்ளனர். எந்தவிதமான அறிகுறியும் இன்றி இருந்துள்ளார்.

கண்ணில் வலி ஏற்பட்டதை அடுத்து பரிசோதித்த போது தான் அவருக்கு கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் அவருக்கு ஒரு கண் அகற்றப்பட்டு விட்டது. மருத்துவ செலவுகளுக்காக நிதி உதவி தேவைப்பட்டது. கிராமமக்கள், நண்பர்கள், சமூக ஆர்வலர்கள் உதவியுடன் இதுவரை ரூ.4லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. நேரடியாக அல்லது வங்கி கணக்கில் பணத்தை செலுத்த கோரி சமூக வலை தளங்களிலும் வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்றனர்.

இந்தநிலையில் பேராசிரியர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டதையடுத்து மானுப்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று மற்றும் கருப்பு பூஞ்சை பாதிப்பு உள்ளதா? என்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
Tags:    

Similar News