செய்திகள்
கோப்பு படம்

உலக தடகள போட்டி - தமிழக வீராங்கனை அர்ச்சனாவுக்கு கடைசி நேரத்தில் வாய்ப்பு

Published On 2019-09-21 10:07 GMT   |   Update On 2019-09-21 10:07 GMT
தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் உலக தடகள சாம்பியன் ஷிப்பில் பங்கேற்கிறார். 200 மீட்டர் ஓட்டப்பிரிவில் கலந்து கொள்ள அவருக்கு கடைசி நேரத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:

உலக தடகள சாம்பியன் ஷிப் போட்டி வருகிற 27-ந்தேதி முதல் அக்டோபர் 6-ந்தேதி வரை கத்தார் தலைநகர் தோதாவில் நடக்கிறது.

இந்தப்போட்டிக்கான இந்திய தடகள அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அணியில் 26 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்று இருந்தனர்.

இந்த நிலையில் தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் உலக தடகள சாம்பியன் ஷிப்பில் பங்கேற்கிறார். 200 மீட்டர் ஓட்டப்பிரிவில் கலந்து கொள்ள அவருக்கு கடைசி நேரத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியை சர்வதேச தடகள சம்மேளனத்திடம் இந்திய தடகள சம்மேளனம் பெற்றுள்ளது.

ஹிமாதாஸ் காயத்தால் விலகி இருந்தார். மற்றொரு தமிழக வீராங்கனை தனலட்சுமி எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை. இதனால் அர்ச்சனாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

மதுரையை சேர்ந்த அர்ச்சனா கடந்த மாதம் லக்னோவில் நடந்த தேசிய தடகள போட்டியில் 200 மீட்டரை 23.39 வினாடியில் கடந்து தங்கம் வென்று இருந்தார்.

இந்த ஆண்டில் 23.18 வினாடியில் ஓடியதே அவரது சிறந்த நிலையாகும். ஆனால் சர்வதேச அளவில் 20.40 வினாடி தான் தகுதி நிலையாக இருக்கிறது.

உலக தடகள சாம்பியன் ஷிப் போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ள 2-வது தமிழர் அர்ச்சனா ஆவார். தருண் அய்யாசாமி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இடம் பெற்று உள்ளார். அவர் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் கலந்து கொள்கிறார்.
Tags:    

Similar News