செய்திகள்
மதுரை விமான நிலையம்

மதுரை விமான நிலையத்திற்கு கைத்துப்பாக்கிகளுடன் வந்த வாலிபரால் பரபரப்பு

Published On 2020-09-05 12:24 GMT   |   Update On 2020-09-05 12:24 GMT
மதுரை விமான நிலையத்திற்கு கைத்துப்பாக்கிகளுடன் வந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மதுரையில் இருந்து குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், குறைந்த அளவிலான பயணிகளே, விமான நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்லும் அனைத்து நபர்களும் பல்வேறு சோதனைகளுக்கு பின்னர் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்தநிலையில், நேற்று மதுரை விமான நிலையத்திற்குள் தலைகவசம் அணிந்த நிலையில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர், பயணிகள் நடந்து செல்லும் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பையும் மீறி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அவரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணமாக பதிலளித்துள்ளார். மேலும், இந்தியாவின் கடனை அடைத்து விடுவேன் என்றும், சீனா போரில் என்னுடைய ஆலோசனைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த நபரை, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பெருங்குடி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை செய்தபோது அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. மேலும், அவர் திருமங்கலம் பகுதியை சேர்ந்த அஸ்வத்தாமன்(வயது 21) என தெரியவந்தது.

அவர் வைத்திருந்த பையில் சோதனை செய்தபோது, அவரிடம் 4 கைத்துப்பாக்கிகள் இருந்துள்ளது. அவை அனைத்தும் விளையாட்டிற்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள். ஒன்று மட்டும் ஏர்கன் துப்பாக்கி வகையை சேர்ந்தது. இதுபோல், அவரிடம் இருந்த 4 செல்போன்களும் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் அஸ்வத்தாமனின் தந்தையை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை விமான நிலையத்தில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News