செய்திகள்
பாஸ்ட் ஃபுட்.

பல்லடத்தில் சிறுவன் பலியான சம்பவம் - ஓட்டல்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

Published On 2021-10-18 08:49 GMT   |   Update On 2021-10-18 08:49 GMT
நேற்று காலை தனுக்குமாருக்கு வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. வாந்தியும் எடுத்துள்ளான்.
பல்லடம்:

பல்லடம் வடுகபாளையத்தில் உள்ள தனியார் ஜவுளி உற்பத்தி நிறுவனத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த குட்டுகுமார், அவரது மனைவி சுகந்திதேவி மற்றும் அவர்களது உறவினர்கள் தங்கி வேலை செய்து வந்தனர். குட்டுகுமார் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட 3 குடும்பத்தினர் தீபாவளி பண்டிகைக்காக துணிகள் வாங்க திருப்பூர் சென்றுள்ளனர். 

அப்போது குட்டுகுமார் மகன் தனுக்குமார் (6) மற்றும் குழந்தைகளுக்கு பாஸ்ட் புட் உணவுகள், கூல்டிரிங்ஸ் உள்ளிட்டவற்றை வாங்கி கொடுத்துள்ளார். மேலும் அன்று இரவு புரோட்டா, குருமாவும் வாங்கி கொடுத்துள்ளார். 

இந்தநிலையில் நேற்று காலை தனுக்குமாருக்கு வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. வாந்தியும் எடுத்துள்ளான். இதையடுத்து தனுக்குமாரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அப்போது ரத்த அழுத்தம் குறைந்து அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இதையடுத்து பல்லடம் வடுகபாளையம் பகுதியில் உள்ள கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை தலைமையில் பல்லடம் வட்டார அலுவலர் கேசவராஜ் உள்பட உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு நடத்தினர். அதில் உணவு பொருட்களின் தரத்தில் குறைபாடு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. 

வாந்தி, வயிற்று போக்கால் குழந்தை இறந்தது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் ஓட்டல்கள்,பாஸ்ட் புட் உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வில் ஈடுபட உள்ளனர். ஓட்டல் உரிமையாளர்களுக்கும் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளனர். 
Tags:    

Similar News