செய்திகள்
அண்ணா அறிவாலயத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை செய்தபோது எடுத்த படம்.

அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Published On 2019-11-29 02:02 GMT   |   Update On 2019-11-29 07:49 GMT
தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை :

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 8.30 மணிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் இந்தியில் பேசிய மர்மநபர், ‘தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் வெடிகுண்டு வைத்திருக்கிறோம்’ என்று கூறி விட்டு, அந்த அழைப்பை துண்டித்து விட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அண்ணா அறிவாலயத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மோப்பநாய் உதவியுடன் அண்ணா அறிவாலயத்தில் சோதனை நடத்தினர். இந்த செய்தி அறிந்ததும் ஏராளமான தி.மு.க.வினர் அண்ணா அறிவாலயத்திற்கு திரண்டு வந்தனர். இதனால் மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது.

வெடிகுண்டு நிபுணர்கள் அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கம், கலைஞர் டி.வி., அண்ணா அறிவாலயம் எதிரே உள்ள பூங்கா என அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை செய்தனர். சோதனையின் முடிவில், வெடிகுண்டு எதுவும் வைக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதன்பிறகே போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இதற்கிடையே அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார்? என்பது குறித்து தேனாம்பேட்டை போலீசார், சைபர் கிரைம் போலீசாருடன் இணைந்து விசாரணை மேற்கொண்டனர். எந்த தொலைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வந்தது என்பதை கொண்டு போலீசார் விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மராட்டிய முதல்-மந்திரி உத்தவ்தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்க நேற்று மும்பை சென்ற நிலையில், அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News