ஆன்மிகம்
மீனாட்சி அம்மன்

மதுரையை ஆளும் மீனாட்சி அம்மன்

Published On 2021-10-26 07:43 GMT   |   Update On 2021-10-26 07:43 GMT
பிற்காலத்தில் பாண்டிய மன்னன் வேண்டுகோளுக்கு இணங்க, வலது காலை தூக்கியும், இடதுகாலை ஊன்றியும் நடனக் காட்சி தந்ததாக ஆலய வரலாறு சொல்கிறது.
சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களும் நடைபெற்ற இடம், மதுரை. இங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், உலக பிரசித்திப் பெற்றது. சக்தி பீடங்களில் முதன்மையானதாகவும் இந்த ஆலயம் திகழ்கிறது.

மீனாட்சி, அங்கையற்கண்ணி போன்ற பெயர் கொண்ட இத்தல அம்பாளின் சிலை மரகத கல்லால் ஆனது. இந்த ஆலயத்தில் அம்பாளே பிரதானம் என்பதால், அவருக்கே முதல் பூஜை செய்யப்படுகிறது. மீன் போன்ற கண்களைக் கொண்டவள் என்தால், ‘மீனாட்சி’ என்ற பெயர் வந்தது. அம்பாள் வீற்றிருக்கும் பீடத்திற்கு, ‘ராஜமாதங்கி சியாமள பீடம்’ என்று பெயர்.

கொலை பாவத்தால் பீடிக்கப்பட்ட இந்திரன், இந்த தலத்திற்கு வந்து சுயம்பு சிவலிங்கத்தைக் கண்டு வழிபட்டு விமோசனம் பெற்றான். அதன் பயனாக விமானத்துடன் கூடிய பெரிய கோவிலை இங்கு அமைத்தான். இதனாலேயே கோவில் விமானம், ‘இந்திர விமானம்’ எனப் பெயர்பெற்றது.

முக்குறுணி விநாயகர்

தனது வயிற்றுவலியை நீக்கிய இத்தல இறைவனுக்கு ஆலயத்தில் ஒரு தெப்பக்குளம் வெட்டினார், திருமலை நாயக்கர். தெப்பக்குள பணியின்போது, பிரமாண்டமான விநாயகர் சிலை கிடைத்தது. அவரை சுவாமி சன்னிதிக்கு செல்லும் வழியில் தெற்கு நோக்கியபடி பிரதிஷ்டை செய்தார். அவரே ‘முக்குறுணி விநாயகர்.’ விநாயகர் சதுர்த்தி அன்று இவருக்கு 18 படி அரிசியில் ஒரே கொழுக்கட்டை செய்து படைக்கப்படும்.

சுயம்பு மூர்த்தியான இத்தல இறைவன், ‘சுந்தரேஸ்வரர்’, ‘சொக்கநாதர்’, ‘சோமசுந்தரர்’ ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

மதுரையில் பதஞ்சலிக்கும், வியாக்ரபாதருக்கும் நடன தரிசனம் அளித்த வெள்ளியம்பலம் உள்ளது. இங்குள்ள நடராஜர் முன்காலத்தில் வலது காலை ஊன்றி, இடதுகாலை தூக்கி நடனம் புரிந்தபடிதான் காட்சியளித்துள்ளார். பிற்காலத்தில் பாண்டிய மன்னன் வேண்டுகோளுக்கு இணங்க, வலது காலை தூக்கியும், இடதுகாலை ஊன்றியும் நடனக் காட்சி தந்ததாக ஆலய வரலாறு சொல்கிறது.

எட்டு கால பூஜை

ஆறுகால பூஜை என்பதுதான் அனேக ஆலயங்களில் இருக்கும் நடைமுறை. ஆனால் மீனாட்சி கோவிலில், திருவனந்தல், விளாபூஜை, காலசந்தி, திரிகாலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தஜாமம், பள்ளியறை பூஜை என எட்டு கால பூஜை நடக்கிறது. இந்த எட்டு கால பூஜையிலும் எட்டுவிதமான கோலத்தில் அம்மன் காட்சி தருவார்.

5 வாசல்கள்

பொதுவாக ஆலயங்களில் ஒன்று அல்லது அதிகபட்சமாக திசைக்கு ஒன்று என 4 வாசல்கள் இருக்கும். ஆனால் மீனாட்சி அம்மன் கோவிலில் 5 வாசல்கள் உள்ளன. கிழக்கு பகுதியில் சுவாமி சன்னிதிக்கு ஒரு வாசல், அம்மன் சன்னிதிக்கு ஒரு வாசல் என 2 வாசல்கள் உண்டு. தவிர தெற்கு ராஜகோபுரம் (160 அடி), மேற்கு ராஜகோபுரம் (154 அடி), வடக்கு ராஜகோபுரம் (152 அடி) ஆகிய வாசல்களும் உள்ளன.

உள்- வெளி ஆவரணம்

மீனாட்சி கோவிலுக்கு வெளியே நான்கு திசைகளிலும் நான்கு புகழ்பெற்ற ஆலயங்கள் உள்ளன. வடக்கே பழைய சொக்கநாதர் கோவில், மேற்கே இம்மையில் நன்மை தருவார் கோவில், கிழக்கே ஐராவதநல்லூர் முக்தீஸ்வரர் கோவில், தெற்கே தென்திருவாலவாய் கோவில் ஆகியவை ‘உள் ஆவரணங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. அதே போல் மதுரைக்கு வெளியே நான்கு திசைகளில் உள்ள ஆலயம் ‘வெளி ஆவரணங்கள்’ எனப்படுகின்றன. அவை, தெற்கில் திருப்பரங்குன்றம், மேற்கில் திருவேடகம், வடக்கில் திருவாப்பனூர், கிழக்கில் திருப்புவனம்.

பொற்றாமரைக் குளம்

நந்தி மற்றும் தேவர்களின் வேண்டுகோள்படி, சிவபெருமான் உருவாக்கியதே ‘பொற்றாமரைக்குளம்.’ ஆலயத்தின் முதன்மையான இந்த தீர்த்தத்திற்கு ‘சிவகங்கை’ என்ற பெயரும் உண்டு. சிவபூஜை செய்வதற்காக, இந்தக் குளத்தில் இருந்து இந்திரன் பொன் தாமரை ஒன்றை பெற்றான். இதனால் ‘பொற்றாமரைக் குளம்’ என்றானது. 165 அடி நீளம், 120 அடி அகலம் கொண்ட இந்த குளத்தில் மீன்கள் கிடையாது.

Tags:    

Similar News