செய்திகள்
பிரதமர் மோடி

பிராந்திய பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாது: பிரதமர் மோடி

Published On 2019-11-04 16:45 GMT   |   Update On 2019-11-04 16:45 GMT
வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் தங்கள் பொருட்களை இந்தியாவில் தடையில்லாமல் இறக்குமதி ஆவதற்கு வகை செய்யும் பிராந்திய பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாங்காங்:

தாய்லாந்தின் பாங்காக் நகரில் ஆசியான் மாநாடு நடந்து வருகிறது. அதில் 15 நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்த ஒப்பந்தத்தால் வெளிநாடுகளில் இருந்து தடையில்லாமல் பொருட்கள் இந்தியாவுக்குள் இறக்குமதியாகும். இதனால் உள்நாட்டில் சிறு, குறு நிறுவனங்களில் வேலையிழப்பும், சிறு வணிகர்களின் பொருளாதாரமும் நசியும் என்று பரவலாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. 

இந்நிலையில், பிராந்திய பொருளாதாரக் கூட்டுறவு மாநாட்டில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி,

'தற்போது நடைமுறையில் உள்ள பிராந்திய பொருளாதார கூட்டமைப்பின் ஒப்பந்த விதிகள் அடிப்படை நியாயம் மற்றும் ஒத்துக்கொள்ளப்பட்ட நடைமுறை கொள்கைகளுக்கு மாறாக உள்ளது. 

இவை இந்தியாவால் எழுப்பப்பட்ட நிலுவையில் உள்ள சிக்கல்களுக்கு திருப்தி அளிக்கும் வகையிலான தீர்வை வழங்கவில்லை. 



இதனால் இந்தியாவில் வாழும் நலிவடைந்த மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். நாட்டுக்காக எந்த ஒரு முடிவை எடுக்கும்போது ஏழை மற்றும் நலிவடைந்தோரின் முகங்களை ஞாபகம் வைத்துக்கொண்டு எடுக்க வேண்டும் என தேசத்தந்தை மகாத்மா காந்தி கூறியிருந்தார். 

அதேபோல் நான் இந்த ஒப்பந்தத்தை இந்தியாவில் வாழும் அனைத்து இந்தியர்களின் நன்மைகளை கருத்தில் கொண்டு ஆராய்ந்தபோது எனக்கு எந்த ஒரு நல்ல முடிவும் கிடைக்கவில்லை. 

ஆகையால், இத்தகைய சூழ்நிலையில் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பில் இந்தியா இணைய வாய்ப்பில்லை’ என அவர் தெரிவித்தார்.    

Tags:    

Similar News