செய்திகள்
காற்று மாசு

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு -மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Published On 2021-11-13 10:03 GMT   |   Update On 2021-11-13 13:20 GMT
டெல்லியில் தேவைப்பட்டால் 2 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மனிதர்கள் சுவாசிப்பதற்கு தகுதியானது அல்ல என்ற நிலையில் காற்றின் தரம் காணப்படுகிறது. இங்கு பல்வேறு இடங்களில் காற்றின் தரக்குறியீடு 400-ஐ தாண்டி உள்ளது. இந்த பிரச்சினை பல மாதங்களாக டெல்லியில் நீடித்து வருகிறது. இதற்கு அண்டை மாநிலங்களான பஞ்சாப், அரியானாவில் எரிக்கப்படும் விவசாய கழிவுகளும் ஒரு காரணம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. டெல்லியை சுற்றி நடைபெறும் கட்டிடப்பணிகளால் புகை பரவுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

இந்நிலையில் டெல்லி 
காற்று மாசுபாடு
 குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆதித்ய துபே, சட்டக்கல்லூரி மாணவர் அமன் பங்கா ஆகியோர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்தது.  அப்போது, டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

டெல்லியில் தேவைப்பட்டால் 2 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

“டெல்லியில் காற்று மாசு
 அதிகரித்திருப்பதை அவசர கால நிலை என கூறலாம். அனைத்து விவகாரங்களுக்கும் விவசாயிகளை குறைகூறுவது தற்போது வழக்கமாகிவிட்டது. கடந்த 7 நாட்களில் எவ்வளவு பட்டாசுகள் வெடிக்கப்பட்டது என்பதை கவனித்தீர்களா? பொதுமக்கள் வீடுகளுக்குள் மாஸ்க் அணியும் அளவிற்கு மாசுபாடு மிகவும் மோசமாக உள்ளது. எனவே  காற்றின் தரத்தை மேம்படுத்த உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Tags:    

Similar News