செய்திகள்
கொலை செய்யப்பட்ட வார்டன் வெங்கட்ராமன்

விடுதி வார்டனை குத்திக்கொன்ற மாணவர் - அதிர்ச்சியை ஏற்படுத்திய காரணம்

Published On 2019-11-07 05:48 GMT   |   Update On 2019-11-07 05:48 GMT
திருச்சி அருகே கல்லூரி விடுதி வார்டனை மாணவர் குத்திக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துறையூர்:

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா கண்ணனூரில் தனியார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி விடுதியின் வார்டனாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் (வயது 45) வேலை செய்து வந்தார்.

அதே விடுதியில் தங்கி பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹக்கீம் (19) என்ற மாணவர் வேளாண்மை 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்தநிலையில் மாணவன் அப்துல் ஹக்கீம் சரியாக படிக்காமல் 8 பாடங்களில் தோல்வி அடைந்துள்ளார்.அதுபற்றி அவருடைய பெற்றோருக்கு விடுதி வார்டன் புகார் தெரிவித்துள்ளார். உங்கள் மகன் சரியாக கல்லூரிக்கு வருவதில்லை என்றும் கூறியுள்ளார். உடனே பெற்றோர் தங்களது மகனை நன்றாக படிக்கும் படி அறிவுரை கூறி கண்டித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அப்துல் ஹக்கீம் தனது அறையில் இருந்த கத்தியை எடுத்துக்கொண்டு வார்டன் அறைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்த வார்டன் வெங்கட்ராமனை கழுத்து மற்றும் இடுப்பு பகுதிகளில் கத்தியால் குத்தினார். இதனால் வார்டன் வலியால் அலறி துடித்தார்.

அலறல் சத்தம் கேட்டு விடுதியில் இருந்தவர்கள் வந்து பார்த்போது ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அவர்கள் வார்டனை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கட்ராமன் இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த ஜெம்புநாதபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வார்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து மாணவர் அப்துல் ஹக்கீமை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விடுதி வார்டனை மாணவர் குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News