செய்திகள்
குரோஷியா பயணம்

இந்திய துப்பாக்கி சுடுதல் அணி குரோஷியா பயணம்

Published On 2021-05-11 20:45 GMT   |   Update On 2021-05-11 20:45 GMT
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள 15 இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் தனி விமானம் மூலம் குரோஷியாவுக்கு புறப்பட்டு சென்றனர்.
புதுடெல்லி:

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள 15 இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர், வீராங்கனைகளில் சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா, மானு பாகெர், இளவேனில், அஞ்சும் மோட்ஜில், ராஹி சர்னோபாத் உள்ளிட்ட 13 பேர் மற்றும் 7 பயிற்சியாளர்கள், 6 உதவி ஊழியர்கள் ஆகியோர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று குரோஷியாவுக்கு புறப்பட்டு சென்றனர். அதன் தலைநகர் சாகிரெப்பில் நடைபெறும் பயிற்சி முகாமில் முதலில் கலந்து கொள்ளும் இந்திய அணியினர் அடுத்து ஆசிஜெக் நகரில் நடைபெறும் ஐரோப்பிய துப்பாக்கி சுடுதல் போட்டி (வருகிற 20-ந் தேதி முதல் ஜூன் 6-ந் தேதி வரை) மற்றும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி (ஜூன் 22 முதல் ஜூலை 3-ந் தேதி வரை) ஆகியவற்றில் பங்கேற்கிறார்கள். ஜூலை 23-ந் தேதி தொடங்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இறுதிகட்டமாக தயாராகும் பொருட்டு குரோஷியாவில் 2½ மாதம் தங்கி தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணியினர் அங்கிருந்து நேரடியாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இந்திய துப்பாக்கி சுடுதல் அணியினரின் குரோஷியா பயணத்துக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து இருக்கும் மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ அவர்களுக்கு அறிவுரையும் வழங்கி இருக்கிறார். அவர் தனது பதிவில், ‘பத்திரமாக பயணம் செய்யுங்கள். மற்ற நாடுகளின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை ஒரு போதும் மீறாதீர்கள். பயிற்சியில் கவனம் செலுத்துங்கள். உடல் ஆரோக்கியத்தை பார்த்து கொள்வதுடன் பாதுகாப்பாகவும் இருங்கள். உங்களுக்கு தேவையான அனைத்து ஆதரவுகளும் அளிக்கப்படும். சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News