செய்திகள்
தமிழிசை சவுந்தரராஜன்

கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி

Published On 2019-10-14 08:24 GMT   |   Update On 2019-10-14 08:24 GMT
தூத்துக்குடி தொகுதி தேர்தல் வழக்கை வாபஸ் பெற அனுமதி வழங்கியும், அதுதொடர்பாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்யவேண்டும் என்றும் பா.ஜ.க., வேட்பாளரும், தெலுங்கானா கவர்னருமான தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை:

பாராளுமன்ற தேர்தல் கடந்த மே மாதம் நடந்தது. இந்த தேர்தலில், தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில், தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, பா.ஜ.க. சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் போட்டியிட்டனர். இதில், கனிமொழி 3.47 லட்சம் ஓட்டுக்களை பெற்று வெற்றிப் பெற்றார்.

இவரது வெற்றியை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன், தூத்துக்குடி வாக்காளர் சந்தானகுமார் ஆகியோர் தனித்தனியாக தேர்தல் வழக்குகளை தொடர்ந்தனர்.

அந்த தேர்தல் மனுவில், ‘கனிமொழி தாக்கல் செய்த வேட்பு மனுவில் ஏராளமான குறைபாடுகள் உள்ளது. முறையற்ற வகையில் இந்த வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் பரிசீலனையின் போது இதுகுறித்து எதிர்ப்பு தெரிவித்தும், அதை தேர்தல் அதிகாரி ஏற்கவில்லை. கனிமொழி கணவரின் வருமானத்தை குறிப்பிடவில்லை. எனவே, இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்து வருகிறார். இதற்கிடையில், தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். அவர் கவர்னராக பதவி ஏற்றதும், கனிமொழிக்கு எதிராக தொடர்ந்த தேர்தல் வழக்கை வாபஸ் பெற முடிவு செய்தார்.


இதுகுறித்து ஐகோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தமிழிசை சவுந்தரராஜன் தன்னுடைய தேர்தல் வழக்கை வாபஸ் பெற நீதிபதி அனுமதி வழங்கினார். இதுகுறித்து அரசிதழில் வெளியிடும்படி ஐகோர்ட்டு தலைமை பதிவாளருக்கும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் வெளியிட்டிருந்த அரசிதழ் விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ‘இந்த தேர்தல் வழக்கை திரும்ப பெற கனிமொழிக்கு அனுமதி வழங்கியும், இந்த வழக்கை திரும்ப பெறுவது தொடர்பாக 10 நாட்களுக்குள் ஆங்கிலம் மற்றும் தமிழ் பத்திரிகைகளில் தமிழிசை சவுந்தரராஜன் விளம்பரம் செய்யவேண்டும்’ என்றும் உத்தரவிட்டார்.

இதன்பின்னர் கனிமொழி சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தன்னுடைய வெற்றியை எதிர்த்து சந்தானகுமார் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இந்த வழக்கில் பதில் தருமாறு சந்தானகுமாருக்கு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 30-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags:    

Similar News