அழகுக் குறிப்புகள்
லேசான உணர்வு தரும் ஜம்தானி சேலைகள்

லேசான உணர்வு தரும் ஜம்தானி சேலைகள்

Published On 2021-12-11 06:31 GMT   |   Update On 2021-12-11 06:31 GMT
இன்றைய நவீன ரசனை மற்றும் போக்குகளுக்கு ஏற்ப ஜம்தானி நெசவானது பாரம்பரியம் மாறாமல் நிலைத்து நிற்பதைப் பார்க்கும்பொழுது அதனுடைய சிறப்பை நாம் நினைக்காமல் இருக்க முடியாது.
இன்றைய நவீன ரசனை மற்றும் போக்குகளுக்கு ஏற்ப ஜம்தானி நெசவானது பாரம்பரியம் மாறாமல் நிலைத்து நிற்பதைப் பார்க்கும்பொழுது அதனுடைய சிறப்பை நாம் நினைக்காமல் இருக்க முடியாது.

ஜம்தானி சேலைகள் என்றாலே நம் நினைவுக்கு வருவது அணிந்தால் இறகு போல லேசாகவும், உலகின் மிக முன்னேறிய கை நெசவு நுட்பத்தால் தயாரிக்கப்படுவது என்பதாகும். கையால் நெய்த ஜம்தானி சேலைகளைப் பார்க்கும் பொழுது அதை நெய்வதில் உள்ள சிரமம் நமக்குப் புலப்படும்.

பட்டு மற்றும் காட்டனில் ஜம்தானி நெசவானது நம்மை வெகுவாகக் கவர்கின்றது. இந்து மற்றும் முகலாய மரபுகளின் கலவையாகத் தோன்றிய மிகச்சிறந்த மற்றும் பழமையான நெசவு வடிவங்களில் ஒன்றான ஜம்தானி அல்லது தகாய் ஜம்தானி என்று அழைக்கப்படும் இவ்வகைச் சேலைகள் வங்காளத்தை பிறப்பிடமாக கொண்டவையாகும்.

இந்த புடவைகள் சிக்கலான வடிவங்களால் வகைப்படுத்தப்படுகின்றன. அவை கிட்டத்தட்ட வெளிப்படையான, அதி நேர்த்தியான துணியின் மேற்பரப்பில் மிதப்பது போன்ற மாய அழகைக் கொடுக்கின்றது.

‘ஜம்தானி’ என்ற சொல் பாரசீக வார்த்தையிலிருந்து தோன்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஜம்-பூ என்றும் தானி-குவளை என்ற பொருள்களைக் குறிப்பதாக உள்ளன. கி.மு. 3-ம் நூற்றாண்டில் கெளடில்யரின் அர்த்த சாஸ்திரத்திலும் கி.பி. நான்காம் நூற்றாண்டில் இருந்து ஆறாம் நூற்றாண்டு வரை அதாவது குப்தர் ஆட்சி செய்த பொழுதும், முகலாய ஆட்சியின் போது (16-18-ம் நூற்றாண்டில்) டாக்கா (இன்றைய பங்களாதேஷ்) நெசவாளர்கள் இந்த துணியை நெசவு செய்து வந்ததாகவும் அரசின் ஆதரவைப் பெற்றதாகவும் கூறப்படுகின்றது. இந்த கால கட்டத்தில் மிகச் சிறந்த மஸ்லின் துணியானது மலர் மற்றும் உருவங்களுடன் உருவாக்கப்பட்டது.

நெசவுத்திறன் ஒரு சிறப்பான கலையாக உயர்ந்த அந்த காலகட்டம் மஸ்லின் துணிகளின் பொற்காலமாகக் கருதப்பட்டது. ஐரோப்பா போன்ற நாடுகளுக்கும் ஜம்தானி சேலைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

இன்றைய நவீன ரசனை மற்றும் போக்குகளுக்கு ஏற்ப ஜம்தானி நெசவானது பாரம்பரியம் மாறாமல் நிலைத்து நிற்பதைப் பார்க்கும்பொழுது அதனுடைய சிறப்பை நாம் நினைக்காமல் இருக்க முடியாது. கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவிலும் பங்களாதேஷிலும் உள்ள அரசாங்கங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் ஆதரவு காரணமாக ஜம்தானி நெசவுக் கலையானது மறுமலர்ச்சி கண்டுள்ளது.

ஜம்தானியின் வகைகள்

ஜம்தானி புடவைகளை அவற்றின் வகைகளின் அடிப்படையில் அல்லது அவை உற்பத்தி செய்யப்படும் பகுதியின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்.

*பன்னா ஹஜார் (ஆயிரம் மரகதங்கள்), கல்கா (பைஸ்லி), பியூட்டிதார் (சிறிய பூக்கள்), ஃபுல்வார் (நேராக வரிசைகளில் அமைக்கப்பட்ட பூக்கள்), டெர்சா (மூலை விட்ட வடிவங்கள்), ஜலார் (முழு சேலையையும் சமமாக உள்ளடக்கும் கருக்கள்), துரியா (போல்கா புள்ளிகள்) மற்றும் சர்கோனா (செவ்வக வடிவங்கள்).

ஜம்தானியின் பிராந்திய வேறுபாடுகள் பின்வருமாறு:-

* தக்காய் ஜம்தானி (பங்களாதேஷ்) :- இவை மிகவும் விரிவான பணித்திறன் மற்றும் சிறந்த அசல் ஜம்தானி புடவைகளாகும். அத்தகைய ஒரு சேலையை நெசவு செய்ய ஒன்பது மாதங்கள் முதல் ஒருவருடம்வரை ஆகலாம்.

*தங்கைல் ஜம்தானி (பங்களாதேஷ்) :- பாரம்பரிய அகல பார்டர்களில் தாமரை, விளக்கு மற்றும் மீன் போன்றவை இருக்குமாறு தங்கைல் மாவட்டத்தில் நெசவு செய்யப்படும் புடவைகளாகும்.

*சாந்திபூர் ஜம்தானி (இந்தியா):- மேற்கு வங்காளத்தின் சாந்திபூரில் நெசவு செய்யப்படும் இவ்வகை சேலைகள் தங்கைல் ஜம்தானி சேலைகளைப்போன்றவையாகும். சிறந்த அமைப்பு மற்றும் நேர்த்தியான கோடுகளால் அலங்கரிக்கப்பட்டவை இவ்வகை சேலைகள்.

*தனியாகாலி ஜம்தானி (இந்தியா):- சாந்திபூர் மற்றும் தங்கைல் சேலைகளுடன் ஒப்பிடும் போது இவை இறுக்கமான நெசவைக் கொண்டுள்ளது. இவை போல்டு கலர்ஸ் மற்றும் அடர்த்தியான மாறுபட்ட பார்டர்களைக் கொண்டுள்ளன.

நவீன போக்குகள்

டாக்காவில் உள்ள அசல் ஜம்தானி புடவைகள் தூய பருத்தியில் நெய்யப்பட்டவை ஆகும். சிறந்த நெசவு, மிகவும் மென்மையான, லேசான மற்றும் விலை உயர்ந்த பருத்தியால் நெய்யப்பட்டவையாகும். இன்றைய காலகட்டத்தில் நவீன ஜம்தானி புடவைகள் பருத்தி மற்றும் பட்டு ஆகியவற்றின் கலவையிலும், சில நேரம் தூய பட்டுகளில் கூட நெய்யப்படுகின்றன. சமகால வடிவமைப்புகளை உருவாக்க வெள்ளி தங்க வண்ண நுல்களைப் பயன்படுத்தி துடிப்பான வண்ணங்களைக் காட்சிப் படுத்துகிறார்கள். இது போன்ற புடவைகள் பளபளப்பான தோற்றம் மற்றும் பாரம்பரியத் தோற்றம் ஆகிய இரண்டும் கலந்து நவீன பெண்கள் அணிந்து கொள்ளும் விருப்பமான சேலையாக உள்ளது.

ஜம்தானி சேலைகளில் தற்போதையை பாணிகள்

*செல்ஃப் கலர்டு ஸ்டைல்:- சேலையில் நெசவானது, அடிப்படை துணியின் அதே நிறத்தில் இருப்பது சேலைக்கு அழகிய தோற்றத்தை அளிக்கிறது.

*ஹாஃப் அண்டு ஹாஃப் ஸ்டைல்:- உட்புற மற்றும் வெளிப்புறத்தில் பாதியானது வேறு வண்ணங்களில் இருப்பது போல் நெசவு செய்யப்பட்டிருப்பது ஒரு அழகான தோற்றத்தைத் தருவதாக உள்ளது.

தமிழ்நாட்டில் பெரிய பெரிய ஜவுளி கடைகளில் இது போன்ற பாரம்பரியமிக்க சேலைகளுக்கென்று தனிப் பிரிவுகளே உள்ளன.
Tags:    

Similar News