செய்திகள்
வெறிநாய்

திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே பொதுமக்களை விரட்டி கடித்த வெறிநாய்

Published On 2019-11-13 10:28 GMT   |   Update On 2019-11-13 10:28 GMT
திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே பொதுமக்களை வெறிநாய் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்:

திண்டுக்கல் நகரில் வெறிநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித் திரியும் நாய்கள் தெருவில் விளையாடும் குழந்தைகளையும் நடந்து செல்லும் பொதுமக்களையும் விரட்டி சென்று கடிக்கின்றன.

இதனால் இரவு நேரத்தில் நடந்து செல்ல பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் திடீரென சாலையின் குறுக்கே ஓடி வருவதால் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.

ஒன்றுக்கொன்று சண்டையிட்டு ரத்தக் காயங்களுடன் சாலையில் சுற்றித் திரிகின்றன. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

திண்டுக்கல் பஸ் நிலையம் பகுதியில் ஏராளமான தள்ளுவண்டி சிக்கன் கடைகள் உள்ளன. இதன் அருகிலேயே சுற்றி வரும் வெறிநாய்கள் பொதுமக்களை விரட்டி கடிக்கின்றன. நேற்று இரவு திடீரென ஒரு வெறிநாய் பொதுமக்களின் கூட்டத்தில் புகுந்தது.

ஆவேசத்துடன் விரட்டி கடித்ததில் கார்த்திக் என்பவர் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

மேலும் ரெயில் நிலையம், நாகல்நகர், சந்தை ரோடு, பாரதிபுரம், திருமலை சாமிபுரம், ரவுண்டு ரோடு, மரியநாதபுரம், அனுமந்தநகர், ரெயில்வே குடியிருப்பு, பால கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட நகரின் அனைத்து இடங்களிலும் தெரு நாய்கள் வெறியுடன் உலா வருகின்றன. ரெயில் நிலையத்தில் சுற்றித் திரியும் தெருநாய்களால் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

எனவே அதிகாரிகள் தெருநாய்களை அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News