செய்திகள்
எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின்

கொடநாடு வழக்கை நடத்துங்கள்... சட்டசபையில் மு.க.ஸ்டாலினுடன் எடப்பாடி பழனிசாமி காரசார விவாதம்

Published On 2021-09-09 14:18 GMT   |   Update On 2021-09-09 14:18 GMT
கொடநாடு எஸ்டேட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது உங்களுக்குத் தெரியாதா? என்று எடப்பாடி பழனிசாமியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, அதிமுக ஆட்சியில் கொலை, கொள்ளை சம்பவங்கள் குறைந்தது, நில அபகரிப்பு நடைபெறவில்லை என்று கூறியதுடன், காவல்துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கினார்.

அவை முன்னவர் துரைமுருகன் பேசும்போது, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியின்போது எவ்வளவு சம்பவங்கள் நடந்துள்ளது என்பதை தன்னால் பட்டியலிட முடியும் என்றார்.



அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஸ்டாலின், “கொடநாடு பங்களா என்பது ஒரு சாதாரண இடம் கிடையாது. மறைந்த முதல்-அமைச்சர் கொடநாட்டில் இருந்து அலுவல் பணிகளை மேற்கொண்டு வந்தார். அந்த இடத்தில் உங்களின் ஆட்சியின் போது கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த சமயத்தில் நீங்கள் தான் முதல்வராக இருந்தீர்கள். கொடநாடு எஸ்டேட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது உங்களுக்குத் தெரியாதா?" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கொடநாடு
 சொத்து தனியாருக்குச் சென்றுவிட்டது. தனியாருக்குச் சென்ற பின்னர் பாதுகாப்பு வழங்கவில்லை. அப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது, என்றார்.



பின்னர் பேசிய முதல்வர் ஸ்டாலின், கொடநாடு சம்பவம் குறித்து விசாரிக்க கூடாது என நீதிமன்றம் சென்றது ஏன்? என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ‘புலன் விசாரணை வேண்டாம் என கூறவில்லை, வழக்கை நடத்துங்கள். நாங்கள் தடை கேட்கவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. நீங்கள்தான் தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு இந்த பிரச்சனையை முன்னெடுத்தீர்கள்’ என்று குறற்ச்சாட்டை முன்வைத்தார்.

முன்னதாக, திமுக சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் பேசும்போது, கொடநாடு விவகாரம், ஜெயலலிதா மரணம் தமிழக மக்களிடையே மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார். ஜெயலலிதா மறைந்தபோது அவரது மரணத்தில் எழுந்த சந்தேகம் தீர்க்கப்படுமா? என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்ததாகவும் குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக பேசிய எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையம் அமைக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. நீதிமன்றத்தில் உள்ள ஒரு விஷயத்தைப் பற்றி பேசுவது அவையின் மரபு அல்ல என்றும், அதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், வழக்கை விரைந்து முடிப்பதற்காகத் தான் உறுப்பினர் சுதர்சனம் பேசினார். எனவே, அதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்க தேவையில்லை என்றார்.

இவ்வாறு கொடநாடு விவகாரம் மற்றும் ஜெயலலிதா மரணம் குறித்து சட்டசபையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.
Tags:    

Similar News