ஆன்மிகம்
கருப்பணசுவாமி கோவில் கதவுகளுக்கு சந்தனம் சாத்துப்படி, சிறப்பு அலங்காரத்தில் சுந்தரராஜபெருமாள்,ஸ்ரீதேவி, பூதேவி

கள்ளழகர் கோவிலில் உள்பிரகாரத்தில் நடந்த ஆடி தேரோட்ட விழா

Published On 2020-08-04 04:19 GMT   |   Update On 2020-08-04 04:19 GMT
கள்ளழகர் கோவில் உள்பிரகாரத்தில் ஆடி தேரோட்ட விழா நடைபெற்றது. இதையொட்டி அங்குள்ள கருப்பணசுவாமி கோவில் கதவுகளுக்கு சந்தனம் சாத்துப்படியும் நடந்தது.
108 வைணவ தலங்களில் ஒன்றாக விளங்கும் மதுரை அருகில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடி மாதம் 10 நாட்கள் நடைபெறும் பிரமோற்சவ திருவிழா முக்கியமானது.

இந்த ஆண்டுக்குரிய விழாவானது கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு அன்ன வாகனத்தில் பெருமாள் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து தினமும் சிம்மம், அனுமன், கருடன், சேஷ, யானை, குதிரை போன்ற வாகனங்களில் கோவில் உள் பிரகாரத்தில் பெருமாள் வீதி உலா வந்தார்.

முக்கிய திருவிழாவான தேரோட்ட விழா நேற்று காலையில் கோவிலின் உள் பிரகாரத்தில் நடந்தது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் என்ற கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடந்தன.

மேலும் வேதமந்திரங்கள் முழங்க சக்கரத்தாழ்வார் புறப்பாடும் நடந்தது. தொடர்ந்து நேற்று இரவு பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவிலில் உள்ள திருக்கதவுகளுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் சந்தன சாத்துப்படி நடந்தது. பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

10-ம் திருநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்த்தவாரியுடன் ஆடி திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா, கண்காணிப்பாளர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

திருவிழா தொடங்கிய நாளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் கோவில் கோட்டை வாசல் முன்பு நின்று கற்பூரம் ஏற்றி தரிசனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News