செய்திகள்
தமிழக அரசு

ரேஷன் அட்டைதாரருக்கான மண்எண்ணெய் அளவு குறைகிறது- தமிழக அரசு தகவல்

Published On 2021-04-14 02:03 GMT   |   Update On 2021-04-14 02:03 GMT
மத்திய அரசு வழங்கும் மண்எண்ணெய் அளவு குறைக்கப்பட்டதால், ரேஷன் அட்டைதாரருக்கு வழங்கப்படும் மண்எண்ணெய் அளவு குறைக்கப்படுகிறது என்று தமிழக அரசு கூறியுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் ஒரு ரேஷன் அட்டைக்கு 2 லிட்டர் மண்எண்ணெய் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் அந்த அளவு குறைக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு தற்போது தமிழகத்திற்கு 20 சதவீதம் மட்டுமே மண்எண்ணெய் ஒதுக்கீடு செய்துள்ளதாக உணவு பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-



மத்திய அரசால் தமிழகத்திற்கு வழங்கப்படும் பொதுவிநியோகத் திட்ட மண்எண்ணெய் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. தற்போது மாநிலத்தின் மொத்த தேவையில் 20 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மத்திய அரசால் மாநிலத்திற்கு வழங்கப்படும் மண்எண்ணெய் ஒதுக்கீடு அளவின்படி அனைத்து மாவட்டத்திற்கும் மண்எண்ணெய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

எனவே மண்எண்ணெய் வழங்கல் அளவு குறித்து ரேஷன் அட்டைதாரர்களிடம் இருந்து புகார்கள் பெறப்படுவதை தவிர்ப்பதற்காக, மாவட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மண்எண்ணெய் பெற தகுதியான ரேஷன் அட்டைதாரர்களுக்கு மண்எண்ணெய் வழங்கல் அளவு குறித்து அனைத்து ரேஷன் கடைகள் மற்றும் மண்எண்ணெய் வழங்கும் நிலையங்களிலும் ரேஷன் அட்டைதாரர்கள் அறியும் வகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News