ஆன்மிகம்
மீனாட்சி அம்மன் கோவில்

மீனாட்சி அம்மன் கோவிலில் சுந்தரேசுவரருக்கு மகா ருத்ர அபிஷேகம் 1-ந்தேதி நடக்கிறது

Published On 2021-08-28 06:53 GMT   |   Update On 2021-08-28 09:01 GMT
அர்த்தசாம பூஜையின் போது, புனித நீரால் சுந்தரேசுவரர்-, மீனாட்சி அம்மன் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகளுக்கு மகா ருத்ர அபிஷேகம், பஞ்சமுக அர்ச்சனை நடந்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் லீலை நடந்தது.

இந்த திருவிளையாடலுக்கு இறைவன் சாதாரண மனிதராக வந்து பிரம்படி பட்டு, மண் சுமந்தார். இதற்காக வருகிற 1-ந் தேதி சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மன் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு மகா ருத்ர அபிஷேகம் நடத்தப்படுகிறது.

அன்றைய தினம் காலை 7 மணிக்கு வேள்வி வளர்க்கப்பட்டு அங்குள்ள 108 கலசத்திற்கு விக்னேசுவர பூஜை, புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம், கலச பூஜை, ருத்ரம், பாராயணம், ருத்ரஹோமம் நடத்தப்படுகிறது. மாலையில் கலசத்திற்கு பூஜை நடந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு கடம் புறப்பாடு நடைபெறுகிறது.

பின்னர் அர்த்தசாம பூஜையின் போது, புனித நீரால் சுந்தரேசுவரர்-, மீனாட்சி அம்மன் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகளுக்கு மகா ருத்ர அபிஷேகம், பஞ்சமுக அர்ச்சனை நடந்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.

வருகிற 1-ந் தேதி நடைபெறும் ருத்ர அபிஷேகத்திற்காக அபிஷேக திரவியங்களான பால், தயிர், சர்க்கரை, பழவகைகள், சந்தனம், விபூதி, மஞ்சள் பொடி, திரவியபொடி, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களை கோவிலில் உள்துறை அலுவலகத்தில் பக்தர்கள் வழங்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News