ஆன்மிகம்
திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில்

பஞ்ச லிங்கம் அருளும் தென்குடி திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில்

Published On 2020-11-20 01:21 GMT   |   Update On 2020-11-20 01:21 GMT
தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தென்குடி திட்டை என்ற திருத்தலம். இந்தக் கோவிலில் வசிஷ்டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.
தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தென்குடி திட்டை என்ற திருத்தலம். பிரளய காலத்தில் அழியாமல் இருந்து, மந்திர ஒலிகள் தோன்றிய மகத்தான தலம் என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு. இந்தக் கோவிலில் வசிஷ்டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.

இறைவியின் நாமம் ‘மங்களாம்பிகை’ என்பதாகும். திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில், ஒரு பஞ்சலிங்க தலமாக விளங்கி வருகிறது. இந்தக் கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. மத்தியில் மூலவர் ஐந்தாவது லிங்கமாக உள்ளார். பஞ்ச பூதங்களுக்கும் உரிய தலமாகவும் இது விளங்குகிறது.

இத்தலத்தில் உள்ள இறைவன் தானே தோன்றியதால் ‘ஸ்ரீவயம்பூதேஸ்வரர்’ என்றும், வசிஷ்ட மகரிஷி தவமிருந்து வழிபட்டதால் ‘வசிஷ்டேஸ்வரர்’ என்றும், பசுக்கள் வணங்கி வழிபட்ட தலம் என்பதால் ‘பசுபதீஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். அனந்தீஸ்வரர், தேனுபுரீஸ்வரர், ரதபுரீஸ்வரர், நாகநாதர், நாகேஸ்வரர் என்ற பெயர்களும் இத்தல இறைவனுக்கு உண்டு.

திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில், திட்டை குரு பகவான் ‘ராஜகுரு’வாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். நவக்கிரகங்களின் வரிசையில் ஐந்தாவதாக இருப்பவர், வியாழ பகவான் எனப்படும் குரு. மற்ற கிரகங்களுக்கு இல்லாத சிறப்பு குருவுக்கு உண்டு.

நவக்கிரகங்களில் சூரியன்-ராஜா. சந்திரன்- ராணி. செவ்வாய் கிரகம் - சேனாதிபதி. புதன் - இளவரசர். குரு பகவான் - ராஜ மந்திரி. மதி நிறைந்த அமைச்சர் என்ற அந்தஸ்தில் உள்ளனர் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

இவருக்கு இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழாவும், அதனையொட்டி லட்சார்ச்சனையும், குருபரிகார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இங்குள்ள குரு பகவானை வேண்டினால் கல்விச் செல்வம், பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் உள்பட அனைத்து செல்வங்களும் எளிதில் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
Tags:    

Similar News