உள்ளூர் செய்திகள்
பேருந்து படிக்கட்டில் மாணவர்கள் பயணம்

மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் ஓட்டுநர், நடத்துனர் மீது கடும் நடவடிக்கை- போக்குவரத்துத்துறை

Published On 2021-12-08 04:58 GMT   |   Update On 2021-12-08 06:37 GMT
பேருந்தில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்தால், பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது.
சென்னை:

சென்னையில் ஓடும் மாநகர பேருந்துகளில் ஏராளமான பள்ளி மாணவர்கள் பயணம் செய்கின்றனர். ஆனால், அவர்கள் ஆபத்தை உணராமல் பேருந்து படிகட்டில் தொங்கியபடியும், ஜன்னல்களைப் பிடித்து தொங்கியபடியும், பேருந்து கூரை மேல் ஏறியும் பயணம் செய்கின்றனர். இதனால், ஏராளமான விபத்துகள் நடைபெறுகிறது.

பேருந்து உள்ளே வரும்படி ஓட்டுநர், நடத்துனர் கூறினாலும் மாணவர்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், பேருந்தில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்தால், பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக
போக்குவரத்துத்துறை
எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஓட்டுநர், நடத்துனர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் மற்றும் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் நிறுத்தி, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகளை ஏற்றி பேருந்துக்குள் செல்ல போதிய இட வசதி ஏற்படுத்திக் கொடுத்து பயணிகள் படியில் நின்று பயணம் செய்யாதவாறு பணிபுரிய அறிவுறுத்தப்படுகிறது.

பயணிகள் கூட்டம் அதிகம் ஏற்படும் பொழுது கூடுதல் பேருந்துகள் இயக்க ஏதுவாக தகவல் தெரிவிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பான முறையில் ஏறி இறங்குவதை உறுதி செய்த பின்பு பேருந்துகளை இயக்க வேண்டும்..

தணிக்கையாளர்கள் வழித்தடங்களில் ஆய்வு மேற்கொள்ளும்போது படிக்கட்டு பயணத்தை முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

புகார்கள், சம்பவங்கள் ஏற்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர், நடத்துனர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்.. தொடர்ந்து உயரும் தக்காளி விலை: இன்று சென்னையில் 130 ரூபாய்க்கு விற்பனை
Tags:    

Similar News