செய்திகள்
காய்ச்சல்

சென்னையை மிரட்டும் புதிய வகை காய்ச்சல் - 4 பேர் பாதிப்பு

Published On 2019-11-29 09:17 GMT   |   Update On 2019-11-29 09:17 GMT
கீழ்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 4 பேருக்கு புதிய வகை காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னை:

எலி காய்ச்சல், பறவை காய்ச்சல், சிக்குன்குனியா என்று ஒவ்வொன்றாய் வந்து வந்து மிரட்டி சென்றது. இப்போது டெங்கு காய்ச்சல் தமிழகத்தையே மிரட்டிக் கொண்டிருக்கிறது. டெங்குவை ஒழிக்க அதிகாரிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் புதிதாக ஒரு வகை காய்ச்சல் புகுந்து மிரட்ட தொடங்கி இருக்கிறது.

கீழ்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 4 பேருக்கு இந்த புதிய வகை காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

‘ஸ்கிரப்டைபஸ்’ என்ற வகையை சேர்ந்த இந்த காய்ச்சல் தமிழகம் முழுவதும் பரவலாக உள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 1400 பேர் இந்த புதிய வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

இந்த வகை காய்ச்சல் தாக்கியவர்களுக்கு காய்ச்சல் உச்சபட்ச அளவாக இருக்கும். உடல் வலி, தலைவலியும் இருக்கும். தீயினால் ஏற்படும் கொப்பளங்களை போலவும் உடலில் தோன்றும்.

மனநல ஆஸ்பத்திரியில் காய்ச்சல் தாக்கியவர்களுக்கு நோய் எதிர்ப்புக்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுபற்றி மருத்துவத்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

இது மர்ம காய்ச்சல் என்று பீதியடைய தேவையில்லை இந்த வகை காய்ச்சல் புதர் பகுதியில் வாழும் ஒரு வகையான தெள்ளுப்பூச்சி கடிப்பதால் பரவுகிறது. ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் உடலில் கொப்பளங்கள் தோன்றி அபாய கட்டத்துக்கு கொண்டு சென்று விடும்.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் இந்த காய்ச்சல் அவ்வப்போது தென்படுகிறது. ‘டாக்சி ரெக்ளின்’ போன்ற நோய் எதிர்ப்பு மருந்துகளால் எளிதில் குணப்படுத்த முடியும். எனவே பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை என்றனர்.

இந்த காய்ச்சலை கண்டுபிடித்து உரிய சிகிச்சை அளிக்காமல் விட்டு விட்டால் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் அளவுக்கு நிலைமை விபரீதமாகி விடும் என்று டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.

சென்னையில் மட்டும் கடந்த சில மாதங்களில் இந்த வகை காய்ச்சல் 45 பேருக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதாக மருத்துவ துறையினர் கூறுகிறார்கள்.


Tags:    

Similar News