செய்திகள்
மதுரை மத்திய சிறை

மதுரை சிறையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ததில் ரூ.100 கோடி ஊழல்

Published On 2021-11-23 09:40 GMT   |   Update On 2021-11-23 09:40 GMT
மதுரை சிறையில் ஊழல் நடந்திருக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பான முழுமையான விவரங்களுடன் புதிய வழக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

சென்னை:

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் பி.புகழேந்தி தாக்கல் செய்திருந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த மருத்துவ பொருட்கள், எழுது பொருட்கள், காகித உறைகள் ஆகியவற்றை அரசு அலுவலகங்கள், மருத்துவ மனைகள், நீதிமன்றங்களுக்கு அனுப்பியதாக போலி கணக்கு தயாரித்து ரூ.100 கோடி வரை ஊழல் நடந்துள்ளது.

ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்பட்ட பொருட்களை லட்சக்கணக்கில் விற்றதாக கணக்கு காட்டி, கடந்த 2016 முதல் 2021 மார்ச் மாதம் வரை 100 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது.

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் இதற்கான ஆதாரங்கள் பெறப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் அப்போதைய சிறை கண்காணிப்பாளர், டி.ஐ.ஜி.களுக்கு தொடர்பு உள்ளது.

இந்த ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி உள்துறை செயலாளர், சிறைத்துறை டி.ஜி.பி. ஆகியோருக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ‘‘இதுதொடர்பாக அளிக்கப்பட்ட மனுவில் வழக்கு ஏதும் பதிவு செய்யப்பட்டுள்ளதா? ஆயிரக்கணக்கான உறைகள் தயாரிக்கப்பட்டதாக மட்டுமே தகவல் அறியும் சட்டத்தில் தகவல் கிடைத்துள்ள நிலையில், லட்சக்கணக்கான எண்ணிக்கையில் விற்றதற்கான ஆதாரங்கள் இல்லாமல், பொது வழக்காக தொடர முடியாது’’ என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மனுதாரர் தரப்பில் வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன் ஆஜராகி தணிக்கை அறிக்கையின் மூலமே ஊழல் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஆவணங்கள் பெறப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

மதுரை சிறையில் ஊழல் நடந்திருக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பான முழுமையான விவரங்களுடன் புதிய வழக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

அதன் அடிப்படையில், வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவித்ததையடுத்து, மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள்... காங்கிரசில் இருந்து விலகி கீர்த்தி ஆசாத் இன்று மாலை மம்தா கட்சியில் இணைகிறார்

Tags:    

Similar News