செய்திகள்

கேரளாவில் ராகுல் போட்டியிட்டதால் காங்கிரஸ் கூட்டணி 20 தொகுதியிலும் முன்னணி

Published On 2019-05-23 05:48 GMT   |   Update On 2019-05-23 05:50 GMT
கேரளாவில் ராகுல் போட்டியிட்டதால் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களே 20 தொகுதியிலும் முன்னிலையில் இருந்தனர். வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி 26 ஆயிரம் வாக்குகளுக்கும் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார்.
திருவனந்தபுரம் :

கேரளாவில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதல் கட்டமாக தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டது.

மொத்தமுள்ள 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கூட்டணிகளே அதிக வாக்குகள் பெற்றன. பாரதீய ஜனதாவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கவில்லை.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி முதல் முறையாக கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். இதனால் கேரளாவில் காங்கிரஸ் செல்வாக்கு அதிகரித்தது. காங்கிரஸ் கூட்டணி கேரளாவில் அதிக இடங்களை கைப்பற்றும் என்று கருத்து கணிப்புகள் வெளியானது.

இதனை உண்மையாக்கும் வகையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களே முன்னிலையில் இருந்தனர். வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி 26 ஆயிரம் வாக்குகளுக்கும் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார். இத்தொகுதியில் பாரதீய ஜனதா 3-வது இடத்தில் இருந்தது.



ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்ட போது கண்ணூர், காசர்கோடு, சாலக்குடி தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. அதன் பிறகு முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நடந்தபோது நிலைமை தலைகீழானது. அனைத்து தொகுதிகளிலும் கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் 2-ம் இடத்திற்கு தள்ளப்பட்டனர். 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணியே முன்னிலை வகித்தது.

கேரளாவில் பாரதீய ஜனதா கட்சியின் மேல்சபை எம்.பி.யாக இருந்த நடிகர் சுரேஷ்கோபி திருச்சூர் தொகுதி பாரதீயஜனதா வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். இதனால் அத்தொகுதியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டபோது இத்தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரதாபன் 2,500-க்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். இவருக்கு அடுத்தப்படியாக கம்யூனிஸ்டு வேட்பாளர் மேத்யூ தாமசும், 3-வது இடத்தில் சுரேஷ்கோபியும் இருந்தனர்.

சபரிமலை கோவில் அமைந்துள்ள பத்தனம் திட்டா தொகுதியிலும் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கும் பாரதீய ஜனதா வேட்பாளர் சுரேந்திரன் 3-வது இடத்தில் இருந்தார்.

திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதிக்கான தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டபோது பாரதீய ஜனதா வேட்பாளர் கும்மனம் ராஜசேகரன் அதிக வாக்குகள் பெற்றார். சில மணி நேரத்தில் அவரை காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் பின்னுக்கு தள்ளினார். முதல் சுற்று முடிவில் சசிதரூர் 4,695 ஓட்டுக்கள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார்.
Tags:    

Similar News