செய்திகள்
கறம்பக்குடியில் உள்ள முருகன் கோவிலை படத்தில் காணலாம்.

கறம்பக்குடியில் முருகன் கோவிலை அகற்ற நெடுஞ்சாலைத்துறை கெடு - பக்தர்கள் வேதனை

Published On 2021-09-25 14:39 GMT   |   Update On 2021-09-25 14:39 GMT
கறம்பக்குடி முருகன் கோவிலை அகற்ற நெடுஞ்சாலைத்துறை சார்பில் கெடு‘ விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்து உள்ளனர்.
கறம்பக்குடி:

கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் 45 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விநாயகர், சிவலிங்கம், தெட்சிணாமூர்த்தி, நவக்கிரகம், துர்க்கை உள்ளிட்ட சாமிகளின் சன்னதிகளும் உள்ளன. சங்கடகர சதுர்த்தி, சஷ்டி, பிரதோஷம் உள்ளிட்ட நாட்களில் இந்த கோவிலில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர். இதைதவிர இந்த கோவிலில் உள்ள பழனி பாதயாத்திரை குழு, பங்குனி உத்திர ரத யாத்திரை குழு மூலம் ஆன்மிக, சமூக பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், முகூர்த்த நாட்களில் ஏழை மக்களின் இல்ல திருமணங்களும் எளிய முறையில் நடைபெற்று வருகிறது.

இந்தகோவில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாகவும், அதனை அகற்ற வேண்டும் எனவும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் முருகன் கோவிலை அகற்ற உத்தரவிட்டனர். கோர்ட்டு உத்தரவின்பேரில், கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு கோவிலை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் வந்தனர். அப்போது பக்தர்கள் மற்றும் இந்து முன்னணியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கோவிலை அகற்றும் முயற்சியை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கைவிட்டனர்.

இதைத்தொடர்ந்து முருகன் கோவிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஏப்ரல் மாதம் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததுடன் முருகன் கோவிலை அகற்ற மீண்டும் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் கோவில் நிர்வாகத்திற்கு நெடுஞ்சாலை துறையினர் நோட்டீஸ் கொடுத்தனர். அதில் நீதிமன்ற உத்தரவுபடி முருகன் கோவிலை கோவில் நிர்வாகத்தினரே ஒரு மாதத்திற்குள் அகற்றி கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் கோவில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நெடுஞ்சாலைதுறை சார்பில் முருகன் கோவில் நிர்வாகத்திற்கு நேற்று மீண்டும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில் வருகிற 29-ந் தேதிக்குள் முருகன் கோவிலை முழுமையாக இடித்து அகற்றி கொள்ள வேண்டும், இல்லையேல் அன்றையதினம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கோவில் இடித்து அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

இதனால் பக்தர்கள் வேதனை அடைந்து உள்ளனர். இதுகுறித்து பெண் பக்தர்கள் கூறுகையில், கோவிலை அகற்ற முயல்வது வருத்தமாக உள்ளது. கோவில் அமைந்துள்ள சாலை விசாலமானது. கோவிலால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. எனவே, கோவிலை அகற்றும் முயற்சியை கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

Tags:    

Similar News