செய்திகள்
பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

விழுப்புரம் அருகே அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2021-02-23 01:06 GMT   |   Update On 2021-02-23 01:06 GMT
விழுப்புரம் அருகே அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வளவனூர்:

விழுப்புரம் அருகே பனங்குப்பம் பெரியகாலனி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் இருந்தும் சுகாதாரமற்ற முறையில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. எனவே சுகாதாரமான குடிநீர் வசதியை செய்து தர வேண்டும் என்றும் சாலை, தெரு மின்விளக்கு மற்றும் சுடுகாடு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட கோலியனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முறையிட்டும் இதுநாள் வரையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை 8.30 மணியளவில் கோலியனூர் கூட்டுசாலை அருகில் காலி குடங்களுடன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர், சாலை, சுடுகாடு வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக செய்து தரக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர். இந்த மறியல் காரணமாக விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன், அங்கு நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அடிப்படை வசதிகளை படிப்படியாக நிறைவேற்றித்தருவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் கூறினார்.

அதற்கு விரைவில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வேண்டும் என்றும் இல்லையெனில் அடுத்தகட்டமாக தொடர் போராட்டம் நடத்துவோம் என்றும் பொதுமக்கள் கூறிவிட்டு காலை 8.50 மணியளவில் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.
Tags:    

Similar News