செய்திகள்
கொள்ளையிட்ட ஆசாமிகள்

திருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய 3வது நபர் கைது

Published On 2019-10-06 06:13 GMT   |   Update On 2019-10-06 06:13 GMT
திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மூன்றாவது நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சி:

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே லலிதா ஜூவல்லரி நகைக்கடை செயல்பட்டு வருகிறது. கடந்த 2-ந் தேதி அதிகாலை இந்த கடையின் பின்புறம் உள்ள சுவரில் துளைபோட்டு கொள்ளையர்கள் 2 பேர் உள்ளே புகுந்து 30 கிலோ எடை கொண்ட ரூ.12 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர மற்றும் பிளாட்டினம் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவம் குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

தனிப்படை போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் திருவாரூரை சேர்ந்த மணிகண்டனை முதலில் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய சீராத்தோப்பு சுரேஷின் தாய் கனகவள்ளியை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த நகைகளை பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து, மணிகண்டன், கனகவள்ளி ஆகியோரை போலீசார் திருவாரூரில் இருந்து திருச்சிக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இருவரையும் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள மாஜிஸ்திரேட்டு வீட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் 18-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு திரிவேணி உத்தரவிட்டார்.

இந்நிலையில், நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான முரளி (26) என்பவரை திருவாரூரின் சீராத்தோப்பு பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர். இவர் கொள்ளையன் முருகனின் அண்ணன் மகன் ஆவார்.  அவரிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News