ஆன்மிகம்
முககவசம் அணிந்தவாறு பக்தர்கள் நீண்ட வரிசையில் அம்மனை தரிசனம் செய்ய காத்திருந்த போது எடுத்த படம்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

Published On 2020-09-18 05:55 GMT   |   Update On 2020-09-18 05:55 GMT
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று காலையில் இருந்தே பல்வேறு பகுதியில் இருந்தும் பக்தர்கள் கார், வேன், பஸ், இருசக்கர வாகனங்கள் போன்றவற்றின் மூலம் சமயபுரம் வந்தனர். பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் முடிகாணிக்கை செலுத்தியும், கரும்புத் தொட்டில்களில் தங்களது குழந்தைகளை சுமந்து சென்று கோவிலை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

மேலும் கோவில் முன்புறமும், தீபம் ஏற்றும் இடத்திலும் பக்தர்கள் நெய் தீபம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபட்டனர். அதைத் தொடர்ந்து பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கோவில் பணியாளர்கள் பக்தர்களுக்கு கைகளில் கிருமிநாசினி தெளித்தனர்.

தொடர்ந்து அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்த பக்தர்களை வரிசையாக அம்மனை தரிசனம் செய்வதற்கு கோவிலுக்குள் அனுப்பி வைத்தனர்.

கோவிலுக்குள் பக்தர்கள், பூ, பழம் போன்றவற்றை கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் பூஜை பொருட்கள் கொண்டு செல்கிறார்களா?, கோவிலுக்குள் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் நிற்கிறார்களா என்றும் தீவிரமாக கண்காணித்த வண்ணம் இருந்தனர்.

வழக்கத்தை விட பக்தர்கள் சமயபுரத்துக்கு நேற்று அதிக அளவில் வந்ததால் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மேற்பார்வையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News