தொழில்நுட்பம்
இன்னோவேஷன் சேலஞ்ச் அறிவிப்பு

அந்த மாதிரி ஒரு செயலி - வெற்றியாளருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கும் மத்திய அரசு

Published On 2020-04-21 09:18 GMT   |   Update On 2020-04-21 09:18 GMT
அந்த மாதிரி ஒரு செயலியை உருவாக்கும் வெற்றியாளருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.



நாடு முழுக்க கொரோனா நோய் தொற்று பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு சார்பில் டெவலப்பர்களுக்கு போட்டி போன்ற சவால் விடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொது மக்கள் வீடுகளுக்குள் இருக்கும் நிலையில் உறவினர்கள், நண்பர்களை சந்திக்க வீடியோ கான்ஃபரென்சிங் சேவைகளே ஒற்றை தீர்வாக மாறியிருக்கிறது.

மேலும் அலுவல் சார்ந்த சந்திப்புகளும் வீடியோ கான்ஃபரென்சிங் மூலமாகவே நடைபெறுகிறது. அந்த வகையில் வீடியோ கான்ஃபரென்சிங் சேவையை விளம்பரப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு புதிய போட்டியை அறிவித்து இருக்கிறது. இன்னோவேஷன் சேலஞ்ச் என அழைக்கப்படும் போட்டி டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ கான்ஃபரென்சிங் செய்ய பொதுமக்கள் ஜூம் எனும் செயலியை பயன்படுத்த துவங்கினர். எனினும், அதில் அதிகளவு பாதுகாப்பு குறைபாடு இருப்பதால் அரசு சார்பில் ஜூம் செயலியை பயன்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டது. மேலும் மக்கள் இதர செயலிகளை பயன்படுத்த அரசு உத்தரவிட்டது.

இதன் தொடர்ச்சியாக மத்திய அரசின் இன்னோவேஷன் சேலஞ்ச் போட்டியில் கலந்து கொள்வோர் நாட்டிற்கென பிரத்யேக வீடியோ கான்ஃபரென்சிங் செயலி ஒன்றை உருவாக்க வேண்டும். மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இதனை அறிவித்து இருக்கிறது. 

வெற்றிகரமாக செயலியை உருவாக்குவோருக்கு ரூ. 1 கோடி பரிசு தொகையாக வழங்கப்படும் என அரசு அறிவித்து இருக்கிறது. போட்டியில் கலந்து கொள்வோர் பின்பற்ற வேண்டிய வழிமுறை மற்றும் விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 



அதன்படி இந்த போட்டியில் மென்பொருள் துறையில் உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்.

முதற்கட்டமாக செயலியை உருவாக்குவோர் வழங்கும் திட்டங்களில் உள்ள புதிய யோசனைகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும். இதில் 10 சிறந்த குழுக்கள் தேர்வு செய்யப்பட்ட ப்ரோடோடைப் உருவாக்குவதற்கான தொகையும் வழங்கப்படும்.

இரண்டாவது கட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பத்து குழுக்களில் இருந்து மூன்று குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிக்கட்ட பணிகளுக்காக ரூ. 20 லட்சம் வழங்கப்படும். மூன்றாவது கட்டம் இறுதி சுற்றாக இருக்கும். இதில் வெற்றி பெறும் திட்டம் மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு, சிறந்த குழுவிற்கு ரூ. 1 கோடி வழங்கப்படும். மேலும் இது மேக் இன் இந்தியாவின் முதல் வீடியோ கான்ஃபரென்சிங் செயலி என்ற பெருமையை பெறும். 

இதுதவிர செயலியை வெற்றி பெறும் குழுவிற்கு ஒவ்வொரு ஆண்டும் செயலியை பராமரிப்பது மற்றும் நிர்வகிக்க ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறும் குழு செயலியை குறைந்த பட்சம் நான்கு ஆண்டுகளுக்காவது செயலிக்கு தேவையான பராமரிப்பு மற்றும் இதர பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
Tags:    

Similar News