செய்திகள்
தடுப்பு மருந்து இல்லை என்று சுகாதார ஊழியர்கள் நோட்டீஸ் ஒட்டியதை படத்தில் காணலாம்.

கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு எதிரொலி: மகாராஷ்டிரா முழுவதும் பல மையங்கள் மூடப்படுகிறது

Published On 2021-04-09 01:48 GMT   |   Update On 2021-04-09 01:48 GMT
மும்பையில் இன்று தடுப்பூசி போடப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் மத்திய அரசு மீது மந்திரி ராஜேஷ் தோபே பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.
மும்பை :

நாட்டில் கொரோனா 2-வது அலை ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இதில் மகாராஷ்டிராவில் அசுர வேகத்தில் தொற்று பரவி வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை நெருங்கியது. மேலும் ஒரு நாள் உயிரிழப்பு 300-ஐ தாண்டி விட்டது.

இதனால் மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தினமும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தலைநகர் மும்பை உள்பட மாநிலம் முழுவதும் பல மையங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக மும்பையில் நேற்று சில மையங்களில் தடுப்பூசி இருப்பு இல்லை என்று கூறி நுழைவு வாயிலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. மேலும் அங்கு தடுப்பூசி போட வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இது குறித்து மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் கூறுகையில், "மும்பையில் இருப்பில் இருக்கும் தடுப்பூசி வியாழக்கிழமை (நேற்று) மாலையுடன் தீர்ந்து விடும். எங்களுக்கு தடுப்பூசி சப்ளை கிடைக்காவிட்டால், வெள்ளிக்கிழமை (இன்று) தடுப்பூசி போடும் பணி நிச்சயமாக நிறுத்தப்படும். மகாராஷ்டிரா இதுபோன்ற மோசமான சூழ்நிலையை சந்திப்பது இது தான் முதல் முறை" என்றார்.

இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே பேஸ்புக் நேரலையில் பேசியதாவது:-

மகாராஷ்டிரா பூகோள ரீதியாகவும், மக்கள் தொகையிலும் பெரிய மாநிலம். நாட்டில் மொத்த தொற்று பாதிப்பில் 55 சதவீதத்தினர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள். இந்தநிலையில் மகாராஷ்டிராவிற்கு குறைந்த அளவில் தான் தடுப்பூசியை மத்திய அரசு வழங்கி வருகிறது.

12 கோடி மக்கள் தொகை கொண்ட மராட்டியத்தில் இதுவரை 1 கோடியே 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இங்கு 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

6 கோடி மக்கள் தொகை கொண்ட குஜராத்தில், தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை வெறும் 17 ஆயிரம் ஆக உள்ளது. வியாழக்கிழமை (நேற்று) மராட்டியத்துக்கு 7.5 லட்சம் டோஸ் மருந்தை மட்டும் மத்திய அரசு வழங்கி உள்ளது. அதிக கொரோனா பாதிப்பு மற்றும் அதிகளவில் தடுப்பூசி போட்டு வரும் மராட்டியத்திற்கு 7.5 லட்சம் டோஸ்கள் மட்டும் வழங்கப்பட்டு இருப்பது ஏன்?.

ஆனால் உத்தரபிரதேசத்திற்கு 48 லட்சம் டோஸ்கள், மத்திய பிரதேசத்திற்கு 40 லட்சம் டோஸ்கள், குஜராத்திற்கு 30 லட்சம் டோஸ்கள், அரியானாவிற்கு 24 லட்சம் டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளது.

மத்திய சுகாதார மந்திரியிடம் பேசியதை அடுத்து வருகிற 15-ந் தேதிக்கு பிறகு 17.5 லட்சம் டோஸ் மருந்து தருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எங்களால் தினமும் 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட முடியும். தற்போது எஞ்சியுள்ள 9 லட்சம் டோஸ்கள் மருந்தின் அடிப்படையில், இன்னும் 1½ நாட்கள் மட்டுமே போட முடியும்.

பன்வெல், சத்தாரா, சாங்கிலி உள்ளிட்ட பல இடங்களில் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டு வருகின்றன. மக்களை திருப்பி அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. தடுப்பூசி விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் இடையே மோதல் இருக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News