செய்திகள்
கோப்புப்படம்

சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது கார் மோதல் - தம்பதி உள்பட 3 பேர் பலி

Published On 2021-01-10 02:09 GMT   |   Update On 2021-01-10 02:09 GMT
வெள்ளகோவில் அருகே பழுதடைந்து சாலையில் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் தம்பதி உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
வெள்ளகோவில்:

கோவை வெள்ளலூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி (வயது 37). இவரது மனைவி இந்து (36). துபாயில் உள்ள ஒரு ஜெனரேட்டர் நிறுவனத்தில் மேலாளராக மயில்சாமி பணியாற்றி வந்தார். இந்து அங்குள்ள ஒரு ஐ.டி.கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த ஆண்டு இந்து துபாயில் இருந்து கோவைக்கு திரும்பி வந்துவிட்டார். கடந்த வாரம் மயில்சாமி துபாயில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். தற்போது வீட்டில் இருந்தபடியே துபாயில் உள்ள ஒரு கம்பெனியில் ஆன்லைன் மூலம் இந்து வேலை பார்த்து வந்தார்.

இதற்கிடையே டென்மார்க் சென்று வேறு நிறுவனத்தில் வேலையில் சேர மயில்சாமி தம்பதி முடிவு செய்து இருந்தனர். இ்தற்காக குடும்பத்துடன் தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்ல மயில்சாமி முடிவு செய்தார்.

இதற்காக கோவையில் இருந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு ஒரு காரில் குடும்பத்துடன் புறப்பட்டனர். காரை மயில்சாமி ஓட்டினார். காரின் முன் இருக்கையில் இந்து அமர்ந்திருந்தார். பின் இருக்கையில் இந்துவின் தாயார் கவுசல்யா (60), மயில்சாமியின் மகன் கவுதம் (13), மயில்சாமியின் தம்பி மகள் ரம்யா (11), மயில்சாமியின் உறவினர் கலைவாணி (46) ஆகியோர் இருந்தனர்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் வழியாக கார் சென்று கொண்டிருந்தது. வெள்ளகோவிலை அடுத்த ஓலப்பாளையம் அருகே காலை 5 மணி அளவில் கார் வந்த போது கோவையில் இருந்து அட்டைப்பெட்டி ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி சென்ற லாரி ஒன்று பழுதடைந்து சாலையில் நின்றுகொண்டிருந்தது. லாரியில் ஏற்பட்ட பழுதை டிரைவர் பாபு (40) சரி செய்துகொண்டிருந்தார். அப்போது மயில்சாமி ஓட்டி வந்த கார், எதிர்பாராதவிதமாக லாரியின் பின்னால் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மயில்சாமி, அவரது மனைவி இந்து, இந்துவின் தாயார் கவுசல்யா ஆகியோர் உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர். காரின் பின் இருக்கையில் இருந்த கலைவாணி, கவுதம், ரம்யா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெள்ளகோவில் போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தினர். அதன்பின்னர் போக்குவரத்து நெரிசல் சரி செய்யப்பட்டது.

மேலும், விபத்தில் இறந்தவர்களின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். விபத்தில் காயமடைந்த 3 பேருக்கும் காங்கேயம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து தொடர்பாக திருச்சியை சேர்ந்த லாரி டிரைவர் பாபுவை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News