செய்திகள்
துரைமுருகன்

கூலி தொழிலாளர்களுக்கு அரசு உதவி செய்யுமா?- துரைமுருகன் கேள்வி

Published On 2020-03-19 09:32 GMT   |   Update On 2020-03-19 09:32 GMT
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கடைகள் மூடப்பட்டுள்ளதால் கூலி வேலை செய்பவர்களுக்கு அரசு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை:

சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் பேசியதாவது:-

கொரோனா வைரஸ் இன்று நாட்டையே புரட்டி போட்டு விட்டது. காரணம் அனைத்து இடங்களிலும் வியாபார ஸ்தலங்கள் மூடப்பட்டுள்ளது.

சினிமா தியேட்டர்கள், கல்வி கூடங்கள் மூடப்பட்டுள்ளன. சிறுதொழில் வியாபாரங்கள் மூடி கிடக்கின்றன. லட்சக்கணக்கான முட்டைகள் வீணாகி விட்டது. சாலைகள் காலியாக கிடக்கிறது.

கோவில்கள், திருமண விழாக்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ‘மிலிட்டரி’ ஓட்டல்கள் மூடியதால் தப்பியது ஆடுகள். மூடப்படாமல் இருப்பது சட்டமன்றம் தான். டாஸ்மாக்கும் மூடப்படவில்லை. இந்த இரண்டும் தான் மூடப்படாமல் உள்ளது. இதை தவிர மற்ற எல்லாம் மூடப்பட்டுவிட்டது.

இதன் விளைவு என்னவென்றால் நேற்று நான் டிவியில் பார்த்தேன். வியாபாரம் செய்யும் ஒரு அம்மா அழுகிறது. கடைகள் மூடப்பட்டதால் கூலி வேலை பார்க்க முடியவில்லை. எனக்கு ஒரு நாள் 300 ரூபாய் கிடைக்கும். இப்போது அது இல்லை என்று பரிதாபமாக பேசுகிறது.

இது மட்டுமல்ல மூட்டை தூக்குபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் அவஸ்தைப்படுகிறார்கள். இது மார்ச் மாதம் என்பதால் வியாபாரிகள் அட்வான்ஸ் டேக்ஸ் கட்ட வேண்டும். ஜி.எஸ்.டி. வரி கட்ட வேண்டும். இப்போது அவர்களிடம் காசு இல்லை. எனவே கூலி வேலை செய்பவர்களுக்கு வண்டி இழுப்பவர்களுக்கு அரசு ஏதாவது உதவி செய்ய முடியுமா?

வியாபாரிகளுக்கு 6 மாத காலம் டேக்ஸ் விடுமுறை விடப்படுமா?

இவ்வாறு அவர் பேசினார்.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது தொழில் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதால் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வருமான இழப்பு உள்ளது.

பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பல்வேறு சலுகைகளையும், ரொக்க மானியமும் அறிவித்து உள்ளது. எனவே தமிழக அரசும் இதுபோன்ற யுக்தியை கடைபிடித்து பொருளாதார பாதிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதற்கு அமைச்சர் கே.சி.வீரமணி கூறுகையில்:-

வரிச்சேவை சலுகையை ஜி.எஸ்.டி. கவுன்சில் தான் முடிவு எடுக்க வேண்டும். அங்கிருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. மக்கள் அதிகம் கூடும் மால், தியேட்டர்கள் தான் மூடப்பட்டுள்ளது. சிறு வணிகம், கடைகளில் வணிகம் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது என்றார்,

அமைச்சர் ஜெயக்குமார்:- வரிச்சேவை சலுகை அறிவிப்பை மாநில அரசால் அறிவிக்க இயலாது. அதை முடிவெடுப்பது ஜி.எஸ்.டி. கவுன்சில் தான். முதல் அமைச்சர் மூலமாக இது தொடர்பாக அழுத்தம் கொடுக்கப்படும். உங்கள் எம்.பி.க்களும் (தி.மு.க.) தகுந்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.
Tags:    

Similar News