தமிழ்நாடு
சின்னமுட்டம் துறைமுகத்தில் விசைப்படகுகள் நிறுத்தப்பட்டிருந்த காட்சி

சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை- துறைமுகம் வெறிச்சோடியது

Published On 2022-04-15 06:37 GMT   |   Update On 2022-04-15 06:37 GMT
மீன்பிடி தடை காலங்களில் விசைப்படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுது பார்க்கும் பணியை தொடங்கியுள்ளனர்.
கன்னியாகுமரி:

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும்.

இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ்கடலில் சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 15-ந்தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல இந்த ஆண்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரை விசைப்படகுகள் மீன்பிடிக்க இன்று முதல் தடை அமுலுக்கு வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தளமாகக் கொண்டு மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் கலை இழந்து வெறிச்சோடி காணப்படுகிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் மீன் சந்தைகளும் வெறிச்சோடி கிடக்கின்றன. இந்த மீன்பிடி தடை காலங்களில் விசைப்படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுது பார்க்கும் பணியை தொடங்கியுள்ளனர்.

இந்த மீன்பிடி தடைக்காலங்களில் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, விளமீன், கைக்கழுவை, நெடுவா போன்ற உயர்ரக மீன்கள் கிடைக்க வாய்ப்பில்லை.

இதனால் இந்த உயர்ரக மீன்களின் விலை கடுமையாக உயர வாய்ப்பு உள்ளது. இந்த மீன்பிடி தடை காலத்தினால் கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


Tags:    

Similar News