இந்தியா
பாஜக

கோவா, உத்தரகாண்டில் பா.ஜனதா ஆட்சிக்கு வாய்ப்பு

Published On 2022-01-03 09:57 GMT   |   Update On 2022-01-03 09:57 GMT
40 இடங்களை கொண்ட கோவா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு 18 முதல் 22 இடங்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 7 முதல் 11 இடங்களும் கிடைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று சமீபத்தில் புதிய கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது. உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் உத்தரகாண்ட், கோவா மாநிலங்களிலும் பா.ஜனதா ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 70 இடங்களை கொண்ட உத்தரகாண்டில் பா.ஜ.க.வுக்கு 42 முதல் 48 வரை இடங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 7 இடங்களும் கிடைக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

40 இடங்களை கொண்ட கோவா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு 18 முதல் 22 இடங்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 7 முதல் 11 இடங்களும் கிடைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் 17 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு இந்த தடவை 4 முதல் 6 இடங்களே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

117 இடங்களை கொண்ட பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி முந்துவதாக கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த கட்சிக்கு 53 முதல் 57 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. 77 இடங்களில் வெற்றி பெற்று ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தடவை 41 முதல் 45 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பா.ஜனதா கட்சிக்கு பஞ்சாபில் செல்வாக்கு இல்லை என்பது கருத்து கணிப்பில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அந்த கட்சிக்கு 1 அல்லது 2 இடங்களில் மட்டுமே வெற்றிகிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பஞ்சாபில் தனித்து ஆட்சி அமைக்க 59 இடங்கள் வேண்டும்.

இந்த எண்ணிக்கையை ஆம் ஆத்மி கட்சி நெருங்கினாலும், தனித்து ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றி கிடைக்குமா என்பது உறுதியாக தெரியவில்லை. எனவே பஞ்சாபில் இழுபறி ஏற்படலாம் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News