செய்திகள்
காங்கிரஸ்

பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும்- மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

Published On 2021-01-25 02:53 GMT   |   Update On 2021-01-25 02:53 GMT
பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று மத்திய அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
புதுடெல்லி:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக காணப்பட்டபோதும், பெட்ரோல், டீசல் விலை முன் எப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கு காரணம், மத்திய அரசு அவற்றின் மீதான உற்பத்தி வரியைக் கூட்டுவதுதான் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுகிறது.

இதையொட்டி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அஜய் மக்கான், டெல்லியில் நேற்று நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து விலகியபோது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 108 டாலர் (சுமார் ரூ.7,900). அப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.51, டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.28 ஆகும்.

தற்போது டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.70, டீசல் விலை லிட்டருக்கு ரூ.75.88. ஆனால் கச்சா எண்ணெய் விலையோ பாதியாக குறைந்துள்ளது.

கடந்த ஆறரை ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை உயர்த்தி மட்டுமே மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடி சம்பாதித்துள்ளது. இப்போது எழுந்துள்ள மிக முக்கியமான கேள்வி, இந்த ரூ.20 லட்சம் கோடி எங்கே போய்விட்டது? அது நரேந்திர மோடியின் முதலாளித்துவ நண்பர்களின் பைகளுக்கு போய் விட்டதா?

இதைத்தான் அரசிடம் இருந்து காங்கிரஸ் தெரிந்துகொள்ள விரும்புகிறது.

2014-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபோது, பெட்ரோல் மீதான உற்பத்தி லிட்டருக்கு ரூ.9.20. டீசல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.3.46.

கடந்த 6 ஆண்டுகளில் பா.ஜ.க. அரசு பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை மேலும் ரூ.23.78-ம், டீசல் மீதான உற்பத்தி வரியை மேலும் ரூ.28.37-ம் அதிகரித்துள்ளது.

பெட்ரோல், டீசல் மீதான இந்த உற்பத்தி வரி உயர்வை குறைத்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.61.92, டீசல் விலை லிட்டருக்கு ரூ.47.51 ஆகி விடும்.

எனவே மத்திய அரசு கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக உயர்த்தியுள்ள பெட்ரோல், டீசல் உற்பத்தி வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் இந்தியில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “பிரதமர் மோடி கியாஸ், டீசல், பெட்ரோல் விலைகளை உயர்த்தி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகப்பெரிய வளர்ச்சியை கொண்டு வந்துள்ளார். மோடி அரசு வரிவசூலில் தீவிரமாக இருக்கிற நிலையில், பண வீக்கத்தினால் மக்கள் கஷ்டப்படுகிறார்கள்” என கூறி உள்ளார்.

சமீபத்தில் பெட்ரோலிய மந்திரி தர்மேந்திர பிரதான், சவுதி அரேபியா தன்னிச்சையாக கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்ததை குறை கூறினார். அதே நேரத்தில் பெட்ரோலிய பொருட்கள் மீதான உற்பத்தி வரி குறைப்பு பற்றி எதுவும் கூறவில்லை.
Tags:    

Similar News