செய்திகள்
தமிழக அரசு

டிசம்பர் மாத ரேஷன் பொருளை வழங்க டோக்கன் வினியோகம்- தமிழக அரசு தகவல்

Published On 2020-11-28 02:19 GMT   |   Update On 2020-11-28 02:19 GMT
டிசம்பர் மாத ரேஷன் பொருளை வழங்க டோக்கன் வினியோகம் செய்வது தொடர்பாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை:

அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், உணவுத்துறை அதிகாரிகளுக்கும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வரும் டிசம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை நாளொன்றுக்கு 225 அட்டைகளுக்கு மிகாமல் வாடிக்கையாளர் வாங்கிக்கொள்வதற்கு ஏதுவாக டோக்கன் வழங்கப்பட வேண்டும். அந்த டோக்கனில் ரேஷன் பொருட்களை அவர்கள் பெறும் நாள், நேரம் குறிப்பிடப்பட வேண்டும்.

இந்த டோக்கனை 29, 30 மற்றும் டிசம்பர் 1-ந் தேதிகளில் வீடுகளுக்கு சென்று ரேஷன் கடை ஊழியர்கள் வழங்க வேண்டும். டிசம்பர் 2, 3 மற்றும் 5-ந் தேதிகளில் பி.எச்.எச். மற்றும் ஏ.ஏ.ஒய். ரேஷன் அட்டைதாரர்களும், 7, 8, 9 மற்றும் 10-ந் தேதிகளில் என்.பி.எச்.எச். அட்டைதாரர்களும் பொருட்களைப் பெற ஏதுவாக டோக்கன் வழங்கப்பட வேண்டும்.

டோக்கனில் குறிக்கப்பட்டுள்ள நேரத்தில் மட்டுமே, குடும்பத்திற்கு ஒருவர் வந்து பொருட்களை பெற முடியும் என்பதை அட்டைதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதை போலீசார் மூலம் ஒலிபெருக்கி வழியாக கூற வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் குடும்பத்திற்கு பொருள் வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

டிசம்பர் 2-ந் தேதியில் இருந்து பொருள் வினியோகம் ஒரே தவணையில் செய்யப்பட வேண்டும். பி.எச்.எச். மற்றும் ஏ.ஏ.ஒய். ரேஷன் அட்டைதாரர்களுக்கு துவரம் பருப்புக்கு பதிலாக 5 கிலோ முழு கொண்டை கடலையுடன் மற்ற பொருட்களை வழங்க வேண்டும்.

என்.பி.எச்.எச். அட்டைதாரர்களுக்கு டிசம்பர் மாதத்திற்கு ஒரு கிலோ துவரம் பருப்பை விலையின்றியும், மற்ற பொருட்களை வழக்கம்போலவும் வழங்க வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்டவர்கள், கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளவர்கள், மிக வயதானவர்கள், நேரில் வர முடியாதவர்களுக்கு வீடுகளுக்கு சென்று பொருள் வழங்க வேண்டும். கடைகளுக்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

ரேஷன் அட்டைகளின் வகை பாகுபாடின்றி அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் தலா 2 முக கவசங்களை வழங்க வேண்டும். கொடுக்காமல் விடுபட்டவர்களுக்கும் இம்மாதமே கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News