ஆன்மிகம்
பசு தானம்

4 வகையான பசு தானம்

Published On 2019-09-04 08:12 GMT   |   Update On 2019-09-04 08:12 GMT
வாஸ்திர தானம், கோதானம், பூமி தானம், அன்னதானம் ஆகியவை விரைவில் பலன் தருபவை என்கின்றன தர்ம சாஸ்திரங்கள்.
தானத்தில் சிறந்தது... மனிதனுக்கு நிதானம் என்ற சொல் வழக்கை அடிக்கடி குறிப்பிடுவார்கள். வாஸ்திர தானம், கோதானம், பூமி தானம், அன்னதானம் ஆகியவை விரைவில் பலன் தருபவை என்கின்றன தர்ம சாஸ்திரங்கள்.

பசு தானம் செய்வதில் நான்கு வகை இருக்கின்றன. அவை.

ஜென்ம லாப கோதானம்:- வாழ்க்கைக் கால கட்டத்தில் மனிதன் முக்கியமாக மத்திய காலத்தில் கஷ்டப்படுவது கடன்களை வாங்கி விட்டு திருப்பி கொடுக்க முடியாது இருப்பதால் தான். ரிஷிக்கடன், தேவகடன் பித்ருக்கடன், மானுஷ கடன் என்று நான்கு கடன்களில் தேவ கடனை வழிபாடுகள் செய்து தீர்த்துக் கொள்கிறான். ரிஷிக்கடனை முன்பிருந்த ஆத்ம யோக சாதுக்களின் பீடங்களின் தரிசனத்தால் தீர்த்துக் கொள்ள முடிகிறது. பித்ரு கடனை புண்ணிய தீர்த்தங் களுக்குச் சென்று எள்ளும் தண்ணீரும் இறைத்துத் தீர்த்துக் கொள்ள முடியும். மானுஷ கடனைத் தீர்க்க முடியாமல் துன்பப்படும் போது சில கடன் தீர்க்கும் பூஜைகளைச் செய்கிறோம். கோதானம் செய்கின்ற வீட்டிலும், கோபூஜை செய்யும் வீட்டிலும் இப்படிப்பட்ட கடன்கள் தங்காமல் விலகிப் போய்விடும்.

உத்க்ராந்தி கோதானம்:- ஒருவர் இந்த உலகத்தை விட்டு மேல் உலகம் செல்ல நேரிடும் சமயத்தில் அல்லது ஜீவன் பிரிந்து விட்ட 32 நிமிடங்களுக்குள் செய்யப்படுவதற்கு (ஜீவன் சாந்திப்படுத்திச் செல்லவைக்கும்) உத்க்ராந்தி கோதானம் என்று பெயர். அடுத்த பிறவியில் நற்குடிப் பிறப்பில் வர வேண்டும் என்று தெய்வங்களை சாட்சியாக வைத்து இந்த தானம் செய்யப்படுகிறது. சமீப காலமாக மட்டை தேங்காயை தாம்பூலத்தில் வைத்து பசுவின் விலையை பணமாக ரூ. 500 மட்டும் வைத்துக் கொடுத்து விடுகின்றனர். அதுவும் அழுது கொண்டே கொடுத்து விடுவார்கள். இது தவறான செயலாகும். கோதானத்தை மிக சிரத்தையுடன் செய்து மகிழ்ச்சியோடு இங்கு தகுதி உள்ளவருக்குக் கொடுக்க வேண்டும். தான வகையில் சிரத்தா தேயம் - மனமுவந்து கொடுக்கும் தானம்.

ஆசிரத்தா தேயம் - கொடுக்க மனஇல்லாமல் கொடுக்கிற தானம்.

பியா தேயம் - பெறுவரிடம் இருந்து பலனை எதிர்பார்த்துக் கொடுக்கின்ற தானம். கோதானம் செய்கின்ற போது முதல் வகையான சிரத்தா தேய முறையிலேயே செய்வதாக இருக்க வேண்டும். வைதீக தர்மசாத்திரத்தில் சொல்லப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு 16 தான வகைகளில் கோதானம் தான் அதிக பொருட் செலவில் வாங்கித்தர வேண்டி உள்ளது. கோமாதாவின் உருவ பொம்மையைக் கன்றுடன் வெள்ளி யில் செய்து கொடுப் பது இரண்டாவது வித மாகப் பலன் தருவதாக சொல்லப்படுகிறது. தேங்காயை வைத்து அதில் கோபூஜை செய்து பசுவை வர்ணித்து தானம் செய்வது மூன்றாவது விதமாகப் பலன் தருகிறது.

எனவே, உயிருடன் உள்ள உண்மையான பசுவைக் கன்றுடன் தருவது மட்டுமே கோதானமாகிறது. பசுவை ஒருவர் வீட்டுத் தொழுவத்தில் வைத்து பூஜை செய்து தரல் கூடாது. அப்படிச் செய்தால் அந்த வீட்டுக்குத் தரித்திரம் வந்து மகாலட்சுமி வெளியே போய் விடுவாள். வெளியில் அழைத்து வந்து முறைப்படி தாம்பூலத்தில் காசு வைத்து அதற்கும் வஸ்திரம் அணிவித்து பூ, பொட்டிட்டு இரண்ய கர்ப்ப மந்திரம் சொல்லித் தர நீர்விட்டு தர வேண்டும்.

வைதரணி கோதானம்:- இறந்தவர்களுக்காகப் பனிரெண்டாம் நாள் ஹோமம் செய்து பித்ரு லோகத்தில் சேர்த்துவிட்ட பிறகு அவர் அங்கிருந்து சொர்க்க லோகம் செல்ல வைதரணி என்ற நதியைக் கடக்க வேண்டி உள்ளது. இது மிகக் கொடூரமான நிகழ்வுகள் நடக்கும் வாய்ப்புள்ள நதியாகும். விஷப் பாம்புகள், முதலைகள், நீர்வாழ் உயிரினங்கள், உள்ள வாழ்கின்ற இந்த நதியை கோமாதாவான பசு கடக்கும் போது அவை ஒன்றும் செய்ய முடியாது. இறந்த ஜீவன் அதில் ஏறி அக்கரையை அடைந்து விட்டால் சொர்க்கத்திற்கு எளிதில் சென்று விடாலம் என்பது நம்பிக்கை.

கர்மாங்க கோதானம்:- மனித வாழ்க்கையில் செய்யப்படுகிற சாந்தி கர்மங்களான, 59 வயதில் உக்ராத சாந்தி, 60 வயதில், 60-ம் கல்யாணம், பீமரசாந்தி 70 வயது, சதாபிஷேகம் 80 வயது ஆகிய கால கட்டங்களில் செய்யப்படுவை கர்மா கால (கர்மாங்க) கோதானம் என்று சொல்லப்படுகிறது. திருமணக் காலங்களில் கன்றுடன் உள்ள பசு பொம்மையை அரசாணிக்கால் நடும் போது பூஜை செய்வது இன்றும் வழக்கத்தில் உள்ளது.

கோதானம் என்று பசுவைப் பிறருக்குக் கொடுக்கும் முன்பு இக்காலங்களில் தேவையற்ற ஒப்பந்தம் ஒன்றைச் செய்கின்றனர். அதாவது, முதலில் பசுவை அழைத்து வந்து தானம் செய்து அனுப்பி விடுவார்கள். அதை நான்கு நாட்கள் கழித்து அதற்கான பாதி தொகையை கொடுத்து மீண்டும் அழைத்து வந்து விடுவார்கள். இச்செயல் கோதானம் ஆகாமல் பாவம் தான் கிடைக்கும். இதைச் செய்ய வேண்டாம். மேலும் கன்றுடன் கூடிய பசுவை பிரித்தல் கூடாது. இப்படிச் செய்தால் வம்ச விருத்தி தடைப்படும். சரியான கோதானத்தால் தான் குடும்பம் மேன்மை பெறும்.

Tags:    

Similar News