செய்திகள்
ராகுல் காந்தி

கொரோனா தடுப்பூசி பணி எப்போது முடிவடையும்? ராகுல்காந்தி கேள்விக்கு மத்திய மந்திரி பதில்

Published On 2021-07-23 19:01 GMT   |   Update On 2021-07-23 19:01 GMT
தடுப்பூசி கொள்முதலுக்கும், தடுப்பூசி செலுத்தும் பணிக்கும் இதுவரை ரூ.9 ஆயிரத்து 725 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி பாரதி பிரவிண் பவார் கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி பணி எப்போது முடிவடையும் என்று மக்களவையில் ராகுல்காந்தி எழுப்பிய கேள்விக்கு மத்திய மந்திரி பாரதி பிரவிண் பவார் பதில் அளித்தார்.

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.கொரோனா தடுப்பூசி போடும் பணிக்கான காலவரையறை, எதிர்பார்க்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, அதற்கு செலவான தொகை, கொள்முதல் ஒப்பந்தத்தில் தாமதம் ஆகியவை குறித்து அவர் கேள்விகள் கேட்டார்.அவற்றுக்கு மத்திய சுகாதாரத்துறை ராஜாங்க மந்திரி பாரதி பிரவிண் பவார் எழுத்து மூலம் பதில் அளித்தார். 

அவர் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசி போடும் பணி எப்போது முடிவடையும் என்று தற்போது காலவரையறை நிர்ணயிக்க முடியாது. வருகிற டிசம்பர் மாதத்துக்குள், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

வருகிற ஆகஸ்டு முதல் டிசம்பர் மாதத்துக்குள் 135 கோடி டோஸ் தடுப்பூசி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். தடுப்பூசி கொள்முதலுக்கும், தடுப்பூசி செலுத்தும் பணிக்கும் இதுவரை ரூ.9 ஆயிரத்து 725 கோடி செலவிடப்பட்டுள்ளது.தடுப்பூசி கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு தரப்பில் எந்த தாமதமும் செய்யப்படவில்லை.



இவ்வாறு அவர் கூறினார்.

18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் எத்தனை பேருக்கு கொரோனா தாக்கியது? என்று மற்றொரு உறுப்பினர் கேள்வி எழுப்பினார். 

அதற்கு பாரதி பிரவிண் பவார் கூறியதாவது:-

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 11 சதவீதம்பேர், 20 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். குழந்தைகளுக்கான தடுப்பூசி தொடர்பாக, மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. 2 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கான தடுப்பூசியின் 2 மற்றும் 3-வதுகட்ட பரிசோதனைகள் நடத்த பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 12 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கான தடுப்பூசியின் 3-வதுகட்ட பரிசோதனை நடத்த காடிலா ஹெல்த்கேர் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, ஒரு உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

கொரோனாவால் 2 ஆயிரத்து 903 ரெயில்வே ஊழியர்கள் பலியாகி உள்ளனர். அவர்களில், 2 ஆயிரத்து 782 பேர் குடும்பங்களுக்கு இழப்பீடு அளிக்கப்பட்டுள்ளது. 1,732 பேரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் அளிக்கப்பட்டுள்ளது.ரெயில்வே ஊழியர்களில் 8 லட்சத்து 63 ஆயிரத்து 868 பேர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 2 லட்சத்து 34 ஆயிரத்து 184 பேர் 2 டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

புல்லட் ரெயில் திட்டம் பற்றிய கேள்விக்கு அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:-

மும்பை-ஆமதாபாத் இடையிலான புல்லட் ரெயில் திட்டத்துக்கு ரூ.13 ஆயிரத்து 483 கோடி செலவிடப்பட்டுள்ளது. கொரோனா காரணமாகவும், மராட்டிய மாநிலத்தில் நிலம் ஒப்படைப்பில் காணப்படும் மெத்தனத்தாலும் இப்பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.சென்னை-பெங்களூரு-மைசூரு உள்பட 7 புல்லட் ரெயில் திட்டங்களுக்கான ஆய்வு பணியும், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிதி உதவி அளித்தல்
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு நிதி உதவி (கருணைத்தொகை) வழங்குவது தொடர்பாக அரசு விதிமுறைகள் வகுக்க வேண்டும், இழப்பீடு அறிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு  சமீபத்தில் உத்தரவிட்டது.இதை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளதா என நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு மத்திய சுகாதார மந்திரி பாரதி பிரவிண் பவார் எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில் அவர், “கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கு வழிமுறைகளை பரிந்துரைக்குமாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அனைவரிடமும் கலந்தாலோசிக்கப்படுகிறது” என கூறினார்.

மற்றொரு கேள்விக்கு அவர் எழுத்து மூலம் அளித்த பதிலில், “மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் கடந்த ஆண்டு ஜனவரி 20-ந் தேதி முதல், இந்த மாதம் 22-ந் தேதி (நேற்று முன்தினம்) வரையில் 4 லட்சத்து 18 ஆயிரத்து 987 பேர் இறந்துள்ளதாக பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News