செய்திகள்
போராட்டம்

ஆண்டிபட்டி அருகே தொகுப்பு வீடுகள் கேட்டு அரசு நிலத்தில் குடியேறும் போராட்டம்

Published On 2021-02-19 07:12 GMT   |   Update On 2021-02-19 20:05 GMT
ஆண்டிபட்டி அருகே மணியாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள், தொகுப்பு வீடுகள் கட்டித் தரக்கோரி அரசு நிலத்தில் குடிசை போட்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆண்டிபட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கோத்தலூத்து ஊராட்சிக்கு உட்பட்ட மணியாரம்பட்டி கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 34 வருடங்களுக்கு முன்பு அரசு சார்பில் 31 தொகுப்பு வீடுகள் கட்டிதரப்பட்டது. அந்த வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் குடும்பங்கள் அதிகரித்து விட்ட நிலையில் ஒரு வீட்டில் 3க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கி வசித்து வருகின்றனர். தங்களுக்கு புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று மாவட்ட கலெக்டர், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மணியாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் தொடர்ந்து மனு அளித்து வந்தனர். மேலும் தொகுப்பு வீடுகள் கட்டி தருவதற்கான இடங்களையும் கிராம மக்கள் பார்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் அரசு மணியாரம்பட்டி கிராம மக்களுக்கு தொகுப்பு வீடுகள் வழங்க முன்வராத காரணத்தால், ஆண்டிபட்டி ஏத்தக்கோவில் சாலையில் உள்ள லக்கல கரடு மலையடிவாரத்தில், வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் அருகே தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் கிராம மக்கள் குடிசை அமைத்து தங்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கிராம மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் அரசு அனுமதியின்றி குடிசை அமைத்தும் உணவு சமைத்தும் தங்கும் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கும் வரை அங்கேயே தங்கியிருந்து போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News