ஆன்மிகம்
பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்.

பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்

Published On 2021-04-28 03:00 GMT   |   Update On 2021-04-28 03:00 GMT
கொரோனா 2-வது அலை தீவிரம் அடைந்து வருவதால், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டது. இதனால் கோவில் வளாகம் பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது.
கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகி வருகிறது. தினசரி 200-க்கும் மேற்பட்டோா் நாமக்கல் மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளாகி அரசு, தனியாா் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் நிலை உள்ளது.

நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு, பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி, அனைத்து வழிபாட்டு தலங்கள், திரையரங்குகள், பெரிய வணிக வளாகங்கள், அழகு நிலையங்கள் ஆகியவை நேற்று முதல் செயல்படாது என்று அரசால் அறிவிக்கப்பட்டு இருந்தது.

நாமக்கல்லில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தா்கள் வருவா். கொரோனா பரவல் காரணமாக இக்கோவிலுக்கும் பக்தா்கள் தரிசனத்துக்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் நேற்று சாமிக்கு வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. ஆனால் பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் ஆஞ்சநேயரை கோவிலுக்குள் சென்று தரிசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

மற்ற கோவில்களில் நடை சாத்தப்பட்டால் சாமியை தரிசனம் செய்ய முடியாது. ஆனால் நாமக்கல் ஆஞ்சநேயரை கோவிலின் வெளியில் நின்றபடி தரிசிக்க வாய்ப்புள்ளது.

மேலும் அரசின் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்கள் உள்ளிட்ட மத வழிபாட்டுத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. மேலும் சினிமா தியேட்டர்களும், வணிக வளாகங்களும் நேற்று முதல் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News