செய்திகள்
கோப்புபடம்

வலங்கைமான் அருகே வக்கீல் கொலை வழக்கில் அண்ணன்-தம்பி கைது

Published On 2020-10-19 08:51 GMT   |   Update On 2020-10-19 08:51 GMT
வலங்கைமான் அருகே நடந்த வக்கீல் கொலை வழக்கில் அண்ணன்-தம்பி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வலங்கைமான்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே முனியூர் கிராமம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் ராஜ்குமார்(வயது 36). இவர், நீடாமங்கலம் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சந்தியா(28). இவரும் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு ராஜ்குமார், சடையன்கால் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் இரவு 12 மணி ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதையடுத்து ராஜ்குமார் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை தேடி சடையன்கால் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றனர். அங்கு சென்ற அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ராஜ்குமார் தலை மற்றும் உடல் பகுதிகளில் பலத்த வெட்டு காயத்துடன் வயல் பகுதியில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து சந்தியா மற்றும் குடும்பத்தினர் அரித்துவாரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தனர். தகவல் அறிந்த நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன், வலங்கைமான் இன்ஸ்பெக்டர் சிவபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். மற்றும் போலீஸ் மோப்ப நாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. இதுகுறித்து அரித்துவாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், ராஜ்குமாரின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் முருகானந்தம் மகன் இளவரசன் (27) என்பவர் முன்விரோதம் காரணமாக ராஜ்குமாரை சில நபர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அரித்துவாரமங்கலம் போலீசார் இளவரசனை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடையவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இதில் தொடர்புடைய முனியூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த சின்னப்பா மகன்கள் ஜனார்த்தனன் (33), ஜவகர் (28) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Tags:    

Similar News